Senthil Balaji : ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கூறிய மனு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கூறிய மனு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக,போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனால் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13-வது முறையாக வரும் ஜனவரி 4-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதனிடையே, புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவா் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவக் குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது.
இதனையடுத்து கடந்த ஆண்டு டிச.07 ஆம் தேதி மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.
இந்த சூழலில் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுக்கலாம். இது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. பின்னர் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.