SG Mart: 3 ஆண்டுகளில் 12,000 சதவீதம் லாபம் கொடுத்த மல்டிபேக்கர் பங்கு..!
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பல நிறுவன பங்குகள் தனது பங்குதாரர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளித்து அவர்களை பெரும் செல்வந்தர்களாக்கியது.
அதில் எஸ்ஜி மார்ட் லிமிடெட் நிறுவன பங்கும் ஒன்று.
மூன்றே ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 12,000 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. இந்த பங்கின் விலை குறித்த விவரங்களை பார்ப்பதற்கு முன் இந்த நிறுவனத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். 1985ல் தொடங்கப்பட்ட எஸ்ஜி மார்ட் லிமிடெட் நிறுவனம் காற்றாலை மற்றும் சூரியமின்சக்தி தீர்வுகளை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பல்வேறு என்ஜினீயரிங், கொள்முதல் மற்றும் கட்டுமான திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.இந்நிறுவனம் முன்பு கின்டெக் ரினீவபிள்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது.
2023 செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, இந்நிறுவனத்தின் புரோமோட்டர்கள் வசம் 75 சதவீத பங்குகள் உள்ளன. சில்லரை முதலீட்டாளர்கள் எஞ்சிய 25 சதவீத பங்கினை வைத்துள்ளார்கள். ஒரு நிறுவனத்தின் தரத்தை வெளிப்படுத்தும் முக்கிய அளவுகோல்களான வருவாய் மற்றும் நிகர லாபம் நிலவரம் இந்நிறுவனத்தை பொறுத்தவரை சிறப்பாக உள்ளது.2023 ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின வருவாய் மற்றும் நிகர லாபம் முறையே ரூ.506 கோடி மற்றும் ரூ.8.95 கோடியாக இருந்தது.
இது 2023 செப்டம்பர் காலாண்டில் முறையே ரூ.748 கோடி மற்றும் ரூ.17.19 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் இரு மடங்கு உயர்ந்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் எஸ்ஜி மார்ட் லிமிடெட் பங்கு அப்பர்சர்க்கியூட் (2 சதவீதம் உயர்வு) அடித்து புதிய 52 வார உச்சமான ரூ.11,371ஐ எட்டியது. தற்போது இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.6,341.61 கோடியாக உள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு தோராயமாக 12,000 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
2021 ஜனவரியில் இப்பங்கின் விலை ரூ.94ல் இருந்தது. தற்போது இப்பங்கின் விலை ரூ.11,371ஆக உயர்ந்துள்ளது. இதன்படி பார்த்தால், 2021 ஜனவரியில் ஒருவர் இந்த பங்குகளில் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் தற்போது அது ரூ.12.10 லட்சமாக அதிகரித்து இருக்கும். குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களின் பணத்தை பல மடங்கு பெருக்கிய இந்த பங்கு உங்களிடம் இருக்கா?.