அடிசக்க! ஒரே நாளில் 300 ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தமிழ்நாடு அரசு.. TNGIM மாபெரும் வெற்றி..!!
இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசின் கொள்கை கட்டமைப்பு, தொழிலாளர் சக்தி வாயிலாக $1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய முடியும் என இந்திய முதலீட்டாளர்கள் முதல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பும் வகையில் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அமைந்துள்ளது.
இன்றைய கூட்ட நிறைவில் தமிழ்நாடு அரசு பல நாடுகள், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் சுமார் 300 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் கூட்டத்தில் சுமார் 50000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குக் கையெழுத்தான நிலையில், இன்று நடக்கும் 300 MoU மூலம் தமிழ்நாடு பெரும் முதலீடு புதிய உச்சத்தை அடைய உள்ளது. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கியப் பிரச்சனையே, ஒப்பந்தம் செய்யப்படும் முதலீடுகளில் பாதிகூட வெற்றி அடையாது என்பது தான். ஆனால் TNGIM 2024 துவங்கும் போதே தமிழகத் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் முதலீடுகளில் குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவீதம் வெற்றி அடையும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளையும், ஏற்பாடுகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு உள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை துவங்கிய நிலையில் 2வது நாள் கூட்டத்திற்குச் சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரி மாணவர்கள் அதிகமாகக் காலையில் இருந்து வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான மக்களை அதிகளவில் ஈர்த்த பகுதியாக ஸ்டார்ட்அப் அரினா விளங்குகிறது. கல்லூரி மாணவர்கள் முதல், தொழில்முனைவோராக உயர வேண்டும் எனத் திட்டமிடுபவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஸ்டார்ட்அப் வளாகம் ஈர்த்துள்ளது.