முன்பதிவில் சறுக்கிய ஷாருக்கானின் டங்கி படம்!

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள டங்கி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் ஷாருக்கானின் பதான் வெளியாகி இந்தியாவில் இந்திப் பதிப்பு மட்டும் 500 கோடிகளைத் தாண்டி வசூலித்தது. அதையடுத்து வெளியான ஜவான் 600 கோடிகளை கடந்து இந்தியாவில் அதிகம் வசூலித்த இந்திப் படம் என்ற சாதனையை படைத்தது.
இன்று டங்கி வெளியாகியுள்ளது. பதான், ஜவான் போன்று ஆக்ஷன் படமல்ல டங்கி. ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய், 3 இடியட்ஸ், பி.கே. சஞ்சு போன்று மனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட திரைச்சித்திரம். ஆக்ஷன் படங்களைப் போல் முதல்நாளே ரசிகர்கள் திரையரங்குகளில் அம்முவதில்லை. மாறாக பத்து தினங்கள் கடந்தாலும் நிலையாக ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்கும் பலம் கொண்டவை.
தேசிய அளவிலான பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் மல்டிபிளக்ஸ்களில் நேற்று காலைவரை 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று காலை அது 2.5 – 2.75 லட்சங்களாக உயரும் என கணித்துள்ளனர். இது டைகர் 3, பிரம்மாஸ்திரா படங்களின் முன்பதிவுடன் ஒப்பிடுகையில் குறைவு.
டைகர் 3, 3.15 லட்சம் டிக்கெட்டுகளும், பிரம்மாஸ்திரா 3.02 லட்சம் டிக்கெட்டுகளும் முன்பதிவாயின. சன்னி தியோலின் கதார் 2 படம் டங்கி அளவுக்கே முன்பதிவானது. அதேநேரம், டைகர் 3, பிரமாஸ்திரா படங்களைவிட அதிகம் வசூலித்தது. டங்கியும் முன்பதிவில் சறுக்கினாலும் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்து, ஷாருக்கானுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என பாலிவுட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.