அதிரும் காசா: பதற்றத்திற்கு மத்தியில் ஐ.நா தலைமைச் செயலாளர் எகிப்திய எல்லைக்கு விஜயம்

மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கும் காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் ஐ.நா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

காசாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் எகிப்திய எல்லைக்கு ஐ.நா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் மேற்கொண்டுள்ள விஜயத்தின்போதே இதனை கூறியுள்ளார்.

இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில் போர் நிறுத்தத்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் வகையில் அவர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் அவதியுறுவதாக ஐநா கவலை வெளியிட்டுள்ளது.

ராஃபா நகரில் தஞ்சம்
இதன் காரணமாக காசாவைச் சேர்ந்த 2.3 மில்லியன் பாலஸ்தீனர்களில் பெரும்பாலானோர் ராஃபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராஃபா நகரில் ஹமாஸ் படைகள் இருப்பதாகவும் அவற்றை வீழ்த்தினால் மட்டுமே ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்க முடியும் என்று இஸ்‌ரேல் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.

இதன் காரணமாக ராஃபாவில் நிலம் வழித் தாக்குதலை நடத்த இஸ்‌ரேல் தயாராகி வருகிறது. இவ்வாறான ஒரு தாக்குதல் நடைபெறுமாயின் உயிர்ச் சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று உலக நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், காசாக்கு அனுப்பிவைக்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் எகிப்தின் வடக்குப் பகுதியில் உள்ள அல் அரிஷ் நகரில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து அவை காசாவின் தென் பகுதியில் உள்ள ராஃபாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

அல் அரிஷ் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள ஐநா மனிதாபிமானப் பிரிவு ஊழியர்களை தலைமைச் செயலாளர் குட்டரஸ் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இஸ்‌ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க ஐநாவின் பாதுகாப்பு மன்றம் நடத்தவிருந்த வாக்களிப்பு மார்ச் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தீர்மானம்
அமெரிக்கா முன்மொழிந்த நகல் தீர்மானம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இஸ்‌ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு இஸ்‌ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.

அமெரிக்கா முன்மொழிந்த நகல் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் ஏற்க மறுத்திருந்தன. மேலும், அமெரிக்காவின் தீர்மானத்தை அரபு நாடுகளும் ஏற்க மறுத்துள்ளன.

காசா மீதான தாக்குதலை இஸ்‌ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று குறித்த நாடுகள் அதிருப்திவெளியிட்டிருந்தன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *