ராயுடு இடத்துக்கு நான் வரவா? 37 பந்துகளில் அரைசதம் விளாசிய சர்துல் தாக்கூர்..ரஞ்சி கோப்பையில் அதிரடி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே தொடக்க வீரர் கான்வே காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக யார் பங்கேற்க போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.
மேலும் வேகப்பந்துவீச்சாளர் பதிராணாவுக்கு காயம் ஏற்பட்டிருப்பது, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக மும்பை அணி தற்போது விளையாடி வருகிறது.
இதில் சிஎஸ்கே வீரர் சர்துல் தாக்கூர் அபாரமாக பேட்டிங் செய்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்திருக்கிறது. டாஸ் வென்ற விதர்பா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்விஷா 46 ரன்களிலும், பூபேஷ் 37 ரன்களிலும் வெளியேறினர்.
இதனை அடுத்து முசிர் கான் 6 ரன்களிலும், ரஹானே 7 ரன்களிலும் ஸ்ரேயாஸ் 7 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற மும்பை அணி 11 ரன்கள் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த சிஎஸ்கே வீரர் சர்துல் தாகூர் பேட்டிங்கில் அதிரடி காட்டினார். விதர்பா பவுலிங்கை சுக்குநூறாக கிழித்த சர்துல் தாக்கூர் 37 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய சர்துல், 69 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் மும்பை அணி 224 என்ற கௌரவமான இலக்கை எட்டியது. ஏற்கனவே தமிழ்நாடு அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் சர்துல் தாக்கூர் இதே போல் அணி தடுமாறிய போது சதம் அடித்து காப்பாற்றினார். இந்த நிலையில் மீண்டும் அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சர்துல் தாக்கூர் தொடக்க வீரர் அல்லது நடுவரிசையில் கூட களம் இறக்கலாம் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.