சிவாஜிக்கே டப்பிங் குரலா? – எந்தப் படத்தில் தெரியுமா
சிவாஜி நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். அப்படி நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பலரையும் போல, சினிமாவைவிட அதிகம் நாடகத்தை நேசித்தார். நாடகத்தில் ரீடேக் இல்லை. ரசிகர்களுக்கு முன்பாக நடித்து, கைத்தட்டல் வாங்க வேண்டும். அதுவொரு சவால். சினிமாவில் பிஸியான பிறகும் சிவாஜி நாடகத்தில் நடிப்பதை விடவில்லை. தனது பெயரில் சொந்தமாக நாடகக் கம்பெனி தொடங்கி, நாடகங்கள் அரங்கேற்றினார். வீரபாண்டிய கட்டபொம்மன் படமும்கூட, சிவாஜி முதலில் நாடகமாக எழுதி வாங்கி, பலமுறை மேடையேறிய பின் படமாக்கப்பட்டதுதான். நாடகத்தை மூச்சாக கருதும் ஒருவருக்கு நாடக நடிகராக சினிமாவில் வேடம் கிடைத்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு வாய்ப்பு பி.மாதவன் படத்தில் சிவாஜிக்குக் கிடைத்தது.
1973 இல் பி.மாதவன் இயக்கத்தில் ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சிவாஜி நடித்தார். அதில் அவருக்கு ரங்கதுரை என்ற நாடகக்கலைஞன் கதாபாத்திரம். கதை நாடகக்காரனை பற்றியது என்பதால் அல்லி அர்ஜுனன், பவளக்கொடி, வள்ளி கல்யாணம், அரிச்சந்திரன் போன்ற புராண நாடகங்கள் படத்தில் இடம்பெற்று, சிவாஜியின் நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்தது. அதைவிட பகத்சிங், திருப்பூர் குமரன், ஹாம்லெட் கதாபாத்திரங்களில் சிவாஜியின் கர்ஜனை நடிப்பு திரையரங்குகளில் ஆரவாரமாக வரவேற்கவும், ரசிக்கவும்பட்டது. ஹாம்லெட் நாடகத்தில் சிவாஜி ஆங்கிலத்தில் அருவிபோல் பேசுகையில் தியேட்டரில் விசில் பறக்கும். இந்தக் காட்சியில் சிவாஜிக்கு டப்பிங் பேசியவர் ஷேக்ஸ்பியர் சுந்தரம் என்பவர். சிவாஜியே அருமையாக ஆங்கிலம் பேசுவார். பின் எதற்காக டப்பிங் குரலை அவர் ஒத்துக் கொண்டார் என்பது ஆச்சரியம். ஷேக்ஸ்பியர் சுந்தரத்தின் ஆங்கிலப் புலமையை ரசிகர்களும் அனுபவிக்கட்டும் என நினைத்திருக்கலாம்.
ராஜபார்ட் ரங்கதுரையில் உஷா நந்தினி நாயகியாக நடித்தார். இவர் மலையாளி. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். 1967 தனது 18 வது வயதில் அவள் மலையாளப் படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து மலையாளம், தமிழில் நடித்தார். தமிழில் அதிகமும் அவர் நடித்தது சிவாஜி படங்கள். பொன்னூஞ்சல், கௌரவம், மனிதனும் தெய்வமும், என்னைப் போல் ஒருவன், ராஜபார்ட் ரங்கதுரை போன்றவை அதில் சில. அறுபதுகளின் இறுதியில் நடிக்கத் தொடங்கிய உஷா நந்தினி எழுபதுகளின் இறுதியோடு நடிப்பதை நிறுத்தி, திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார். அதன் பிறகு அவர் சினிமாவுக்கு வரவில்லை.
ராஜபார்ட் ரங்கதுரையில் சிவாஜியின் – அதாவது ரங்கதுரையின் தம்பியாக ஸ்ரீகாந்த் நடித்தார். தன்னை பணக்காரன் என நம்ப வைத்து பணக்காரப் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் வேடம். ரங்கதுரையின் தங்கை வேடத்தில் ஜெயா நடித்தார். நாடக வாத்தியார் வி.கே.ராமசாமி, மனோரமா, சுருளி என்ற முக்கூட்டணி அவ்வப்போது ரசிகர்களை சிரிக்க வைத்தது. இந்தப் படத்தின் சிறப்பம்சம் எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் இணையின் இசையும், பாடல்களும். ‘அம்மம்மா தம்பி..’. பாடலில் மெட்டும், வரிகளும், இசையும், சிவாஜியின் முகபாவனைகளும் ரசிகர்களின் இதயத்தை கரைத்தது. ‘மதன மாளிகை…’ அருமையான டூயட் பாடலாக அமைந்தது.
1973 இல் ராஜபார்ட் ரங்கதுரை வெளியான போது தமிழகமெங்கும் சிறப்பான வரவேற்பை பெற்றது. சென்னையில் இரண்டு வாரங்களில் 200 அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற சாதனையுடன் 100 நாள்களை கடந்து ஓடியது படம். 44 வருடங்கள் கழித்து, 2017 இல் ராஜபார்ட் ரங்கதுரையை டிஜிட்டலில் மேம்படுத்தி மறுவெளியீடு செய்தனர். அப்போது மதுரை மீனாட்சி திரையரங்கில் வெளியான படம் மீண்டும் 100 தினங்கள் ஓடி சாதனை படைத்தது.
சிவாஜியின் நவரச நடிப்பை ஒரே படத்தில் கண்டு களிக்க ராஜபார்ட் ரங்கதுரை சிறந்த படம். 1973 ஆம் ஆண்டு, டிசம்பர் 22 இதே நாளில் வெளியான படம் 49 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.