இங்கிலாந்தில் தோட்டத்தில் பள்ளம் தோண்டிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி: வெடிகுண்டு நிபுணர்கள் குவிந்ததால் பரபரப்பு
இங்கிலாந்தின், தன் மகளுக்காக வீட்டுத் தோட்டத்தில் பள்ளம் தோண்டிய ஒருவர், அங்கு வெடிகுண்டு ஒன்று இருப்பது தெரியவந்ததால் பொலிசாரை அழைத்துள்ளார்.
மகளுக்காக வீட்டுத் தோட்டத்தில் பள்ளம் தோண்டிய நபர்
இங்கிலாந்தின் Plymouth என்னுமிடத்திலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர், தன் வீட்டை சற்று பெரிதாக்க விரும்பியதால், அவரது தந்தை அவருக்கு உதவியாக தோட்டத்தில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவரது மண்வெட்டி ஏதோ உலோகப் பொருள் ஒன்றில் மோதவே, பள்ளம் தோண்டுவதை நிறுத்தியுள்ளார் அவர்.
தவிர்க்கப்பட்ட பயங்கரம்
இந்த விடயம் உண்மையில் கடந்த வாரம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் பள்ளம் தோண்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அந்த பள்ளத்திலிருந்த மண் மழையால் அடித்துச் செல்லப்பட, அங்கிருந்த பொருளைக் கண்ட அந்த நபரின் மனைவி உடனடியாக பொலிசாரை அழைப்போம் என கணவரிடம் கூறியுள்ளார்.
அந்தப் பொருளை மொபைலில் புகைப்படம் எடுத்து அவர் பொலிசாருக்கு அனுப்பியுள்ளார்.
குவிந்த வெடிகுண்டு நிபுணர்கள்
அடுத்த 10 நிமிடங்களில், அந்த வீட்டுக்கு பொலிசார் மட்டுமின்றி, வெடிகுண்டு நிபுணர்களும் குவிய, அப்பகுதியே பரபரப்பாகியுள்ளது.
ஆம், அந்த வீட்டுத்தோட்டத்தில் கண்டுபிடிக்கபட்டது, சுமார் ஒரு மீற்றர் நீளமும், அரை மீற்றர் அகலமும் கொண்ட ஒரு இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு!
உடனடியாக, 200 மீற்றர் சுற்றளவுக்கு மக்கள் நடமாட தடைகளை உருவாக்கிய பொலிசார், அப்பகுதியிலிருந்த வீடுகளிலிருந்த மக்களை வெளியேற்றியுள்ளார்கள்.
வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், அந்த நபர் தனது மண்வெட்டியால் அந்த வெடிகுண்டு மீது மோதியும் மோசமாக எதுவும் நிகழாததால், அதிர்ஷ்டவசமாக அவரும் அந்த பகுதியில் வாழ்ந்த மக்களும் பெரும் ஆபத்திலிருந்து தப்பியுள்ளார்கள்.