சென்னையில் அதிர்ச்சி..! தவறான சிகிச்சை அளித்து காதுகளை அழுக வைத்த பார்லர் உரிமையாளர்..!
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த இளம் பெண் ஜெயந்தி( 36). இவர் பியூட்டிசியன் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பியூட்டி பார்லர் வைக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஜெயந்தி அரும்பாக்கம் சண்முகா நகரில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அப்போது கம்மல் போட்டு, காது ஓட்டை பெரிதாகி இருப்பதால் அதை அடைக்க தங்களிடம் மருந்து இருப்பதாக அந்த பார்லரின் உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தழும்பு ஏதும் வராதவாறு, மருந்து மூலமாகவே காதில் இருக்கும் ஓட்டையை அடைப்பதாக உரிமையாளர் கூறியதையடுத்து, சிகிச்சைக்கு ஜெயந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த மருந்தை பயன்படுத்திய சில நாட்களில், ஜெயந்தியின் இரண்டு காதுகளும் அழுக துவங்கியது. இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்று அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஜெயந்தி, பார்லர் உரிமையாளரிடம் நியாயம் கேட்டதாக தெரிகிறது, அப்போது, அந்த பார்லரின் உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக ஜெயந்தி, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் பியூட்டி பார்லரின் உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஜெயந்தி கூறுகையில், ”காதுகளில் ஓட்டை மறைவதற்கு, அகிலாண்டேஷ்வரி ஆசிட் ஒன்றை காதுகளில் ஊற்றி 1 மாதத்தில் ஓட்டை அடைந்துவிடும் என தெரிவித்தார். அந்த ஆசிட் அதிகப்படியான எரிச்சல் இருந்ததால் இது குறித்து கேட்ட போது அப்படிதான் இருக்கும். விரைவில் சரியாகி விடும் என அவர் கூறினார். பின்னர் மீண்டும் ஆசிட்டை காதில் ஊற்றிய போது காது மரத்து, அந்த இடத்தில் இருந்து துர் நாற்றம் வீச துவங்கியது. 20 நாட்களுக்குள் காது அறுந்து விழுந்து விட்டதாக ஜெயந்தி கூறினார்.
பின்னர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சிகிச்சைக்காக காண்பித்த போது, அவர் உடனே காதை அகற்ற வேண்டும். இல்லையென்றால் மற்ற இடங்களுக்கு தொற்று பரவி விடும்” என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.