அதிர்ச்சி.. செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது விபரீதம்.. விஷவாயு தாக்கி ப்ளம்பர் பரிதாப பலி..!

சென்னை அடுத்த அம்பத்தூரை சேர்ந்த சுரேஷ் (ப்ளம்பர்) என்பவர் தனது நண்பர்கள் ரமேஷ், ராஜேஷ் ஆகியோருடன் திருமுல்லைவாயில் நடேசன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது, கழிவுநீர் தொட்டியையும் சுத்தம் செய்ய குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கியதில் சுரேஷ் மயங்கி கழிவுநீர் தொட்டிக்குள் சரிந்து விழுந்தார்.
அவரை காப்பாற்ற முயன்ற ரமேஷும் மயங்கி விழுந்ததால், தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற சுரேஷின் உறவினர்கள், “வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், இங்கு வந்த பின், கழிவுநீர் தொட்டியில் வேலை செய்ய வைத்துள்ளனர்,” என, குற்றம் சாட்டினர்.இந்நிலையில், ஆவடி நகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல்ரகுமான், அங்கு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து சுரேஷின் உறவினர் கலைச்செல்வி கூறுகையில், “வீட்டு வேலை இருப்பதாகவும், அதுவும் குறைந்த சம்பளம் தருவதாக கூறி அழைத்தனர். வேலை காரணமாக வந்தவர், இயந்திரம் மூலம் சுத்தம் செய்யாமல் செப்டிக் டேங்கில் இறக்கி கொலை செய்தனர். … உயிருடன் திரும்பி வருவாரா? சொல்லுங்கள்… இன்றைக்கு எத்தனை இயந்திரங்கள் வந்துள்ளன… இன்னும் இதைத்தானே செய்கிறீர்கள்?” என ஒரு அழுத்தமான கேள்வியை எழுப்பினார்.