அதிர்ச்சி… பள்ளி பேருந்து ஓட்டுநருடன் 8-ம் வகுப்பு மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை!
எட்டாம் வகுப்பு மாணவியுடன் பள்ளி பேருந்து ஓட்டுநர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜம்பூர் தாலுகாவில் கிரியாபூர் கிராமத்தில் ஞானதீபா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் சந்தோஷ்(28).
இவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பள்ளி பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த ஜனனி (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியுடன் சந்தோஷ் நெருங்கி பழகியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடச் செல்வதாக ஜனனி கூறியுள்ளார். அவர் வீட்டை வெளியே வரும் போது சந்தோஷ் ஜனனியை அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு வரை மாணவி ஜனனி வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜம்பூர் அருகே வங்கினகட்டே அருகே தண்டவாளத்தில் சந்தோஷ் மற்றும் ஜனனி உடல்கள் நேற்று கிடந்தன. நள்ளிரவில் அவர்கள் இருவரும் ரயில் அடிபட்டு உயிரிழந்து தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு அஜ்ஜாப்பூர் தாலுகா மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அப்போது இருவரும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.