திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கணுமா? சாணக்கியர் சொல்லும் ரகசியம் இதோ..!
மௌரியர் ஆட்சிக் காலத்தில்.. சந்திரகுப்த மௌரியரின் ஆலோசகர், அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், இந்திய தத்துவவாதி… சாணக்கியர். இவர் அரசியல், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை பற்றிய பல நெறிமுறைக் கொள்கைகளை வழங்கினார். இவை பொன் எழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. அந்த கொள்கைகளில் சிலவற்றை இப்போது தெரிந்து கொள்வோம்.
சாணக்கிய நீதி, அடிப்படையில் மனித வாழ்க்கையின் நடைமுறை விஷயங்களையும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை பற்றியும் சொல்லும். அந்த வகையில் ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்யநிதியில் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு சில விதிகளை வழங்கியுள்ளார். அவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…
சாணக்யா நீதியில் குறிப்பிட்டுள்ளபடி, தனது வாழ்க்கை துணை சொன்னவுடன் செய்ய வேண்டிய முக்கியமான சில வேலைகள் உள்ளன. அவை…
முதலாவது எதையும் இல்லை என்றும் வேண்டாம் என்றும் சொல்லாதே. சற்று யோசித்து நிதானமாக வேறு விதமாகதான் சொல்ல வேண்டும். முடிந்தவரை அவர்கள் கேட்டதை செய்துவிடுவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு நல்லது..
இரண்டாவதாக, அமைதி. உங்களின் வாழ்க்கை துணை சற்று சோகமாக இருந்தால், அல்லது வருத்தமாக இருந்தால் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்க வேண்டும். பின்னர் அவரது மனதை அமைதிப்படுத்தி பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.
மூன்றாவதாக உங்கள் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களை மட்டுமே செய்யுங்கள். இல்லையெனில், உறவு மோசமடையக்கூடும். நீங்கள் செய்யும் ஒரு செயல் அவருக்கு பிடிக்காது என்றால் அதை செய்ய வேண்டாம் என சாணக்கிய நீதி சொல்லுகிறது.
நான்காவதாக, ஒருவரின் கோபமே அவரின் முதல் எதிரி. உறவைக் கெடுப்பது கோபம். ஒருவரின் திருமண வாழ்க்கையில், துணையிடம் கோபத்தை தவிர்த்து பொறுமையை கடைப்பிடித்தாலே பல பிரச்னைகள் தீர்ந்து விடும். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படத் தொடங்கினால் வாழ்க்கை நரகம் ஆகிவிடும். அதனால் ஆத்திரம், கோபத்தைக் கைவிட வேண்டும்.
ஐந்தாவதாக, குடும்பத்திலும், சமூகத்திலும் நம்முடைய அடையாளமாக நேரடியாக தெரிவிக்கக்கூடியது நம்முடைய பேச்சு. இனிமையான பேச்சு கொண்டவருக்கு குடும்ப உறவிலும், சமூகத்திலும் எப்போதும் மதிப்பும் மரியாதையும் கூடும்..