வித்தையை காட்டிடீங்க தம்பி.. தேடி வந்து பாராட்டிய ரூட், ஸ்டோக்ஸ்.. ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் மரியாதை!
இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர்களான ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் தேடி வந்து பாராட்டியுள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 336 ரன்களுடன் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் குல்தீப் யாதவை ஒருமுனையில் வைத்து, ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார்.
ஆண்டர்சனின் பந்தை தடுத்து ஆடிய ஜெய்ஸ்வால், சோயப் பஷீர் பந்தில் அதிரடியை வெளிப்படுத்தினார். அந்த அதிரடி 190 ரன்களை எட்டிய போதும் குறையவில்லை என்பது ஆச்சரியம். 191 ரன்கள் எடுத்திருந்த போது, சோயப் பஷீர் பந்தில் சிக்ஸ் மற்றும் பவுண்டரியை அடுத்தடுத்த பந்துகளில் விளாசி இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசும் 25வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் இந்திய அணிக்காக இரட்டை சதம் விளாசிய 4வது இடதுகை பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 7 சிக்ஸ், 19 பவுண்டரி உட்பட 209 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர்களான ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர் ஜெய்ஸ்வாலை தேடி வந்து கைகொடுத்து பாராட்டி சென்றனர். அதேபோல் போப், டக்கெட், ரெஹான் அஹ்மத், ஃபோக்ஸ் உள்ளிட்டோரும் பாராட்டினர்.
அதுமட்டுமல்லாமல் பெவிலியன் நோக்கி ஜெய்ஸ்வால் நடக்க தொடங்கிய போது, இங்கிலாந்து மற்றும் இந்திய அணி ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேட்டை உயர்த்தி ஓய்வறை திரும்பினார். அப்போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி பாராட்டினர்.