கார் டேஸ்போர்டு கேமராவை காட்டியும் பயன் இல்ல!! வழிப்பறி கொள்ளை மாதிரில்ல இருக்கு இது!
தெலுங்கானாவில் ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) கார் மீது பைக் ஓட்டி ஒருவர் மோதி உள்ளார். ஆனால் அந்த பைக் ஓட்டி உள்ளூர்வாசி என்பதால், உள்ளூர் மக்களின் உதவியுடன் வென்யூ கார் ஓட்டியிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடப்பதற்கு காரணம், நம்மில் பலரிடத்தில் இன்னும் போதிய சாலை விழிப்புணர்வு இல்லாமையே. பொது சாலையில் ஆக்ரோஷமாக வாகன ஓட்டுவது, குடிப்போதையில் வாகனம் ஓட்டப்படுவதை தினந்தோறும் பார்க்க முடிகிறது. அதேபோல், எதிர்திசை பாதையில் வாகனங்கள் ஓட்டப்படுவதையும் நிறைய இடங்களில் காணலாம்.
அதாவது, நோ-எண்ட்ரீ பாதையில் வாகனம் ஓட்டுவது அல்லது நடு வெள்ளை கோட்டை தாண்டி எதிர்திசையில் வாகனம் ஓட்டுவது நம் மக்களுக்கு பிடித்தமான விஷயமாக இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால், இத்தகைய டிரைவிங் எப்போதும் ஆபத்தானவை. அதற்கு சிறந்த உதாரணமாக, தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
இந்த சம்பவத்தில் பாதிப்புக்கு உள்ளான ஹூண்டாய் வென்யூ கார் உரிமையாளர் இதுகுறித்த வீடியோவை யுடியூப்பில் வெளியிட்டுள்ளார். தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து இவர் தனது வென்யூ காரில் சென்றுக் கொண்டிருந்த போது ஹைவேயில் இந்த விபத்து நடத்துள்ளது. இந்த வென்யூ கார் சென்றுக் கொண்டிருந்த நெடுஞ்சாலை ஆனது மொத்தம் 4 பாதைகளை கொண்டதாக உள்ளது.
இதில், குறுக்கே வெள்ளை கோடால் பிரிக்கப்பட்ட 2 பாதைகளில் வாகனங்கள் செல்ல, மற்ற 2 பாதைகளில் எதிர்திசையில் வாகனங்கள் செல்வதை வீடியோவில் காணலாம். சாலையின் வலதுப்பக்கத்தில் இந்த வென்யூ கார் சென்றுக் கொண்டிருக்க, இடதுப் பக்கத்தில் பேருந்து ஒன்று அந்த சமயத்தில் சென்றுக் கொண்டிருந்தது.
பேருந்து, ஆட்டோவை விட காரில் அதிக வேகத்தில் பயணிக்க முடியும் என்பதால், அந்த இரு வாகனங்களையும் ஓவர்டேக் செய்ய இந்த வென்யூ கார் டிரைவர் முயற்சித்துள்ளார். முதலில், ஆட்டோவை ஓவர்டேக் செய்துவிட்டார். பின்னர், இண்டிகேட்டர் போட்டு பேருந்தை ஓவர்டேக் செய்ய முயற்சி செய்த சமயத்தில், பைக்கில் வாலிபர் ஒருவர் ஆபத்தான விதத்தில் எதிர்திசையில் வந்துள்ளார்.
அதாவது, காருக்கு நேரெதிராக அந்த பைக் வந்துள்ளது. எதிர்திசை சாலையில் வாகனம் ஓட்டுவதே தவறு. இதில் இந்த வாலிபர் சாலையின் நடுவே, வெள்ளை நிற கோட்டிற்கு அருகே பைக்கை ஓட்டி வந்துள்ளார். இதனால், பேருந்தை ஓவர்டேக் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்த வென்யூ கார் ஓட்டி ரியாக்ட் செய்யவே நேரம் கிடைக்கவில்லை. பைக் கார் மீது மோதிவிட்டது.
இந்த நிகழ்வுகள் யாவும் காரின் டேஸ்போர்டில் இருந்த கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த விபத்தை கண்டதும் சாலையின் ஓரத்தில் இருந்தவர்கள் உடனே ஒன்று கூடிவிட்டனர். வந்தவர்கள் எதிர்திசையில் வந்தவரை திட்டுவார்கள் என்று பார்த்தால், கார் ஓட்டியை திட்டிவிட்டு அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பைக்கில் வந்தவருக்கு வாங்கி கொடுத்துள்ளனர். இந்த விஷயங்களை வென்யூ கார் ஓட்டி பின்னர் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார்.