கம்ப்யூட்டரில் இருந்து மூளைக்கு சிக்னல்… அசத்தும் எலான் மஸ்க் நிறுவனம்!

மனிதன் எதிர்கொள்ளும் பல்வேறு நோய்களுக்கு தீர்வு காண மனித மூளையில் “சிப்” பொருத்தும் முயற்சியில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முதன்முறையாக வெற்றிபெற்றுள்ளார்.

மின்சார கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா, விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்பேஸ் எக்ஸ் என தொழில்நுட்பத்துறையில் முன்னோடி நிறுவனங்களை நிறுவியவர் எலான் மஸ்க். அவரது மற்றொரு முக்கிய நிறுவனம்தான் மனித மூளையில் சிப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நியூரா லிங்க். ஆம்! மனித மூளைக்கும், கம்ப்யூட்டருக்கும் இடையே இணைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல்வேறு நோய்களுக்கு தீர்வை காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது நியூராலிங்க் நிறுவனம்.

ஒருவருக்கு நோய் ஏற்பட்டால், அவருக்கு மருந்து கொடுத்து தீர்வு காண்பதுதான், வழக்கமான மருத்துவ அறிவியல். ஆனால், அதற்கு பதிலாக, கம்ப்யூட்டரில் இருந்து மனித மூளைக்கு சிக்னல் அனுப்பி, உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் வகையில் உருவாக்கியிருப்பதுதான் நியூராலிங்க் சிப். அந்த வகையில், ஆட்டிசம், பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இந்த சிப் பொருத்தப்படும். இந்த சிப் மூளையின் செயல்பாட்டை தூண்டிவிட்டு, நரம்புகளை செயல்பட வைக்கும்போது, ஆட்டிசம், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும் என்பதுதான் எலான் மஸ்க் நிறுவனத்தின் விளக்கம்.

அதாவது, மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு எந்த மருந்தை கொடுத்தாலும், அதை செயல்பட வைப்பதற்கான உத்தரவுகளை கொடுப்பது மனித மூளைதான். மூளை உத்தரவு கொடுக்காவிட்டால், உடல் நன்றாக இருந்தாலும், அதில் இருக்கும் எந்த உறுப்புகளும் இயங்காது. ஆனால், இந்த சிப் பொருத்தப்படும்போது, கம்ப்யூட்டரில் இருந்து சிக்னல் அனுப்பி, உடல் உறுப்புகளுக்கு என்ன மாதிரியான உத்தரவுகளை மூளை கொடுக்க வேண்டும் என கட்டுப்படுத்தப்படும்.

இந்த வகையில், எந்த மருந்துகளும் இன்றி, கடந்த ஆண்டு நடுக்கவாத பாதிப்பை கம்ப்யூட்டர் சிப் மூலமே சரி செய்து, ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள் ஜெர்மனி மருத்துவர்கள். இதையே மேம்படுத்தி, பல்வேறு நோய்களுக்கு தீர்வு காணும் முயற்சிக்காக தயாரிக்கப்பட்ட உபகரணத்திற்கு டெலிபதி (Telepathy) என பெயர் வைத்துள்ளார் எலான் மஸ்க். இந்த உபகரணத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து சோதனையை நடத்தியது நியூராலிங்க். அது வெற்றிபெற்றதை அடுத்து, மனிதர்களை கொண்டு சோதனை செய்ய நியூராலிங்க் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம்.

இதையடுத்து, முதன்முறையாக மனிதனின் மூளையில் சிப் பொருத்தப்பட்டு, சோதனை நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார் எலான் மஸ்க். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை தொடங்கிய நிலையில், சிப் பொருத்தப்பட்டிருக்கும் நபரின் உடல் தேறி வருவதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இது ஆரம்ப கட்ட சோதனைதான் என்பதால், இன்னும் ஆறு ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார் எலான் மஸ்க். இந்த சோதனைகள் வெற்றிகரமாக நடந்தாலும், இந்த சிப் சந்தைக்கு வர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகும் என்கிறது நியூராலிங்க் நிறுவனம்.

முதற்கட்டமாக கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தவர்கள் மற்றும் பார்வை இழந்தவர்கள் என சுமார் 100 கோடி பேருக்கு வரும் 2040ஆம் ஆண்டுக்குள் இந்த உபகரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் மஸ்க். கம்ப்யூட்டரில் இருந்து மூளைக்கு சிக்னல் அனுப்பி கட்டுப்படுத்துவதைப் போல, மூளையில் இருந்து சிக்னல் அனுப்பி கம்ப்யூட்டரையும் கட்டுப்படுத்த முடியும். நியூராலிங்க் நிறுவனத்தின் இந்த முயற்சி மனித குலத்திற்கு மிகப்பெரிய வரமாக அமையும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *