பெரியப்பாவாக புரமோஷனடைந்த சிம்பு.. 4 வருஷம் கழித்து அப்பாவான குறளரசன்
சென்னை: நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் திரையுலகில் பன்முகம் காட்டிவரும் டி ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரண்டு மகன்கள் மற்றும் இலக்கியா என மகள் உள்ளார்.
இவர்களில் குறளரசன் மற்றும் இலக்கியாவிற்கு திருமணமான நிலையில், சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். 40 வயதை கடந்த நிலையில் இவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதே ரசிகர்களின் நீண்டநாள் கேள்வியாக உள்ளது. ஆனால் இது குறித்தெல்லாம் எந்த கவலையும் கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
சிம்பு நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி சூப்பர்ஹிட்டடித்துள்ளன. இதனால் மிகவும் உற்சாகமாக அடுத்தப்படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் சிம்பு. STR48 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதும் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைப்பதற்கான வேலைகள் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது.
நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் தன்னை இணைத்து வருகிறார். வெங்கட் பிரபுவுடன் மாநாடு படத்தை ஹிட் படமாக்கிய சிம்பு, தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த படங்களையும் வெற்றிப்பட வரிசையில் இணைத்திருந்தார். இந்நிலையில் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR48 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
STR48 படம்: முற்றிலும் வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது. இதற்கான செட் வேலைகளை தற்போது படக்குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கெட்டப்புகளையும் சிம்புவே ஏற்று நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுளள்து. இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் பல பயிற்சிகளையும் வெளிநாடுகளில் சிம்பு மேற்கொண்டு வருகிறார்.