சிங்கப்பூர் சலூன் அரசியல் படமல்ல… ஆர்ஜே பாலாஜி விளக்கம்

ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி நடித்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். ரௌத்திரம், இதற்குத்தானே அசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் படங்களை இயக்கிய கோகுல் சிங்கப்பூர் சலூனை இயக்கியுள்ளார்.

மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே பாலாஜி நடித்திருக்கும் மூன்றாவது படம் சிங்கப்பூர் சலூன். இதற்கு முன் நடித்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன் இரண்டும் வெற்றிப் படங்கள். இரண்டும் சமகால அரசியலை விமர்சனம் செய்தவை. சிங்கப்பூர் சலூனும் அரசியல் படமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்த நிலையில், அதற்கு விளக்கம் சொல்வது போலிருந்தது ஆர்ஜே பாலாஜியின் விளக்கம். அவர் பேசுகையில்,

“இந்தப் படம் எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் மக்களுக்குத் தேவையான கமர்சியல் எலிமெண்ட் எல்லாம் கலந்து இருக்கும். லோகேஷ் கனகராஜ், ஜீவா கேமெியோ ரோலில் நடிச்சிருக்காங்க. இது மட்டும் இல்லாமல், ஒரு பெரிய சர்ப்ரைஸ், ஒரு பெரிய நடிகர் இந்தத் திரைப்படத்தில் நடிச்சிருக்காரு. அதை யாரென்று இப்ப சொல்ல முடியாது. படத்தைப் பார்த்து நீங்களே பயங்கர சர்ப்ரைஸ் ஆவீங்க. ஆரம்பத்துல இந்தத் திரைப்படத்தை உள்வாங்க எனக்குக் கடினமா இருந்தது. அப்புறம் போகப்போக நான் பழகிக்கிட்டேன். சமூகக் கருத்துகளை மேலோட்டமா சொல்லி இருக்கோம். அரசியல் பேசாத இந்தப்படம் மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று கூறினார்.

இயக்குநர் கோகுல் பேசுகையில் இந்தத் திரைப்படத்தில் 60% காமெடி மீதி 40% எமோஷன், சென்டிமென்ட் என்ற பல பரிமாணங்கள் உள்ளடக்கி இருக்கு. நாம எப்படி ஒரு சாதாரண சலூன் கடைக்குப் போயிட்டு முடி எல்லாம் வெட்டுனதுக்கு அப்புறமா நம்மள பார்க்கும்போது ஒரு திருப்தி, ஒரு சந்தோஷம் வருமோ, அதே மாதிரி, இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிச்சதுக்கு அப்புறமா உங்க எல்லாருக்கும் நிச்சயமாக தோன்றும். என்னுடைய நகைச்சுவை இந்தப் படத்துல இருக்கு. அது இல்லாம, வித்தியாசமாகவும் முயற்சி செஞ்சிருக்கோம். நான் என்னோட வாழ்க்கையில பார்த்த நிறைய முடி திருத்துபவர்கள்தான் இந்தக் கதைக்கான இன்ஸ்பிரேஷன். இன்னிக்கு இருக்கக் கூடிய எல்லா பெரிய நடிகர்களும் அவங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட்காக காத்துக்கிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு இன்னைக்கு இந்தத் தொழில் மிகப்பெரிய இடத்தைப் போய் அடைஞ்சிருக்கு. இந்த உள் கருத்தை மையமா வச்சு, இதிலேயே நிறைய விஷயங்களை நாங்க இந்தத் திரைப்படத்தில் பேசி இருக்கோம்” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், “சிங்கப்பூர் சலூன் இதுவரைக்கும் நான் தயாரித்த திரைப்படங்களை விட அதிகப் பொருட்செலவுல தயாராகி இருக்கும் திரைப்படம். ஆர்ஜே பாலாஜியால இப்படியும் நடிக்க முடியுமா அப்படின்னு மக்கள் வியக்குற மாதிரியான ஒரு கதை. அவரும் அதுக்கு ஏத்த மாதிரி நடித்திருக்கிறார். எனக்கு இந்தக் கதை மேல பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஃபர்ஸ்ட் ஆஃப் எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து மகிழ வைக்கும் கதையாகவும், செகண்ட் ஹாஃப் எமோஷன் மோட்டிவேஷன் இந்த மாதிரி பல சுவாரசியங்களை இந்தத் திரைப்படம் உள்ளடக்கி இருக்கும்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *