சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!

பெண்கள் தங்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைக்க, சரியாக நிதி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக சிங்கிளாக வாழும் பெண்கள் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ப சிறந்த முறையில் நிதி திட்டமிடலை மேற்கொள்வது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.அதற்கான வழிகாட்டுதல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முதலில் உங்களது செலவினங்களை கண்காணிக்க, வருமானம், அத்தியாவசிய செலவுகள் மற்றும் விருப்ப செலவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு பட்ஜெட்டை உருவாக்கிக் கொள்வது மிக அவசியம். இதன் மூலம் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு உங்களால் எவ்வளவு தொகையை ஒதுக்க முடியும் என்பதை எளிதாக அடையாளம் காண முடியும்.

அடுத்த ஆறு மாத காலத்திற்கு உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணம் உங்களது அக்கவுண்டில் எப்பொழுதும் இருப்பாக வைத்திருக்க வேண்டும். இது எதிர்பாராத செலவுகளை சமாளிக்க உங்களுக்கு உதவும். குறிப்பாக உங்களுக்கு என ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு செய்து வைப்பது அவசியம்.

இந்த முன்முயற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தனியாக வாழும் பெண்கள் நிதி ஸ்திரத்தன்மைக்கு ஒரு திடமான அடித்தளத்தை அமைக்கலாம். இது எதிர்காலத்தில் சவால்களை சமாளிக்க உதவியாக இருக்கும்.

நீண்ட கால செல்வத்தை உருவாக்க முதலீட்டு விருப்பங்களை ஆராய்வது முக்கியம். இதற்காக மியூச்சுவல் ஃபண்டுகள், நிலையான வைப்புத் தொகை திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். மாதந்தோறும் ரூ. 500 ஐ எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களது முதலீட்டு பயணத்தை எளிதாக துவங்க முடியும்.

பல்வேறு வருமான ஆதாரங்களை உருவாக்குவது நிதி சார்ந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாகும். வாடகை வருவாய் தரும் சொத்துக்கள் அல்லது பகுதி நேர வேலை போன்ற வழிகளை கருத்தில் கொள்ளுங்கள். தொழில்முறை படிப்புகள் அல்லது திறன் மேம்பாட்டின் மூலம் உங்கள் மீது நீங்கள் முதலீடு செய்து வேலை வாய்ப்புகளையும் வருமானம் ஈட்டும் திறன்களையும் மேம்படுத்த முடியும். உங்கள் வருமானத்தை பல வகைப்படுத்தி திட்டமிட்டு முதலீடுகளை செய்வதன் மூலம் நீண்ட கால நிதி பாதுகாப்பிற்கு வழி வகுக்கலாம்.

குறிப்பாக தனியாக வசிக்கும் பெண்கள் ஓய்வூதியத்திற்கு திட்டமிடுதல் கட்டாயம். இந்திய பெண்களில் வெறும் 2 சதவிகிதத்தினர் மட்டுமே தங்களது ஓய்வு காலத்திற்கான முதலீடுகளை மேற்கொள்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. ஓய்வு காலம் அமைதியானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்க ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *