ஸ்ரீகாந்த் சார் சொன்ன வார்த்தை.. தோனி கொடுத்த அந்த வாய்ப்பு.. வாழ்க்கையே மாறியது.. அஸ்வின் பேச்சு!
டிஎன்சிஏ சார்பில் அஸ்வினுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், சிஎஸ்கே அணியில் இணைந்த கதை குறித்தும், வாழ்வின் முக்கிய மாற்றம் குறித்தும் பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 500 விக்கெட்டுகள் மற்றும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழ்நாடு வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். இதனை பாராட்டும் வகையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிஎஸ்கே உரிமையாளர் ஸ்ரீனிவாசன், டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், முதல்முறையாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. அப்போது சென்னை அணியில் எனக்கு ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. உள்ளூர் வீரர்கள் அப்போதும் ஏலத்தில் விடப்படவில்லை. அந்த நேரத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மைக்கை எடுத்த ஸ்ரீகாந்த், டேய் அஸ்வின்.. பார்த்தேன்டா.. செம்மையா பவுலிங் செய்தாய்..என் பையன் அனிருத் எப்போதும் நீ தான் பெஸ்ட் என்று சொல்வான்.. கலக்கனும்.. சிஎஸ்கே அணிக்கு சென்று பின்னிடனும்.. முத்தையா முரளிதரன் கிட்ட இருந்து எல்லா ஜூஸையும் எடுத்திடனும் என்று கூறினார்.
நான் கொஞ்சம் சோகமாக இருந்தேன். ஏனென்றால் எனக்கு சிஎஸ்கே ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை. அப்போது உடனடியாக காசி விஸ்வநாதனை பார்த்த ஸ்ரீகாந்த், “என்ன காசி.. எடுக்கலையா” என்று கேட்டார். அந்த ஒரு வார்த்தை என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. அடுத்த நாளிலேயே எனக்கு சிஎஸ்கே அணியின் ஒப்பந்தம் கிடைத்தது. வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறிவிட்டது. அதன்பின் சிஎஸ்கே அணிக்கு சென்று, ஜாம்பவான் வீரர்களை சந்தித்தேன். ஹெய்டன், எம்எஸ் தோனி, முரளிதரன் என்று ஏராளமானோர் இருந்தனர்.
முத்தையா முரளிதரன் போன்ற ஜாம்பவான் இருக்கும் போது நான் எப்படி பிளேயிங் லெவனில் இருகக் முடியும். அங்கு நான் ஒரு சிறுவனை போல் இருந்தேன். அப்போது பிசிசிஐ பொருளாளராக ஸ்ரீனிவாசன் இருந்தார். அன்றைய நாளில் தோனி ஒரு செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீனிவாசன் சார் தோனியிடம், எம்எஸ்.. எம்எஸ்.. அஸ்வின் என்று ஒரு பையன் இருக்கிறான்.. அவன் ஆஃப் ஸ்பின்னர்.. தமிழ்நாட்டை சேர்ந்தவன்.. அவனை ஒருமுறை நீ பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
உடனடியாக தோனி, நிச்சயம் பார்க்கிறேன் என்று தெரிவித்தார். அதனை நான் ஓரம் அடித்த ஷாட்களை கேட்ச் பிடித்தவாறு கவனித்து கொண்டிருந்தேன். அதன்பின் கிறிஸ் கெய்லை எதிர்த்து முதல் ஓவரை வீச தோனி எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்புக்காக தோனிக்கு நான் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளேன். அந்த காட்சிகள் குறித்து தான் அனில் கும்ப்ளே 17 ஆண்டுகளுக்கு பின் இப்போதும் பேசுகிறார். அந்த ஒரு நிமிடம் என் வாழ்க்கை மாறியது. அதன்பின் 2013ஆம் ஆண்டில், என்னை நீக்க வேண்டும் என்று சிலர் கூறினார்கள்.
ஆனால் கடந்த தொடரில் அஸ்வின் தான் தொடர் நாயகன். அதனால் அஸ்வின் அணியில் இருக்க வேண்டும். அவருடன் தான் தொடர வேண்டும் என்று கூறி இருக்கிறேன். அதன்பின் தேர்வு குழு, உங்களுக்கு அஸ்வின் வேண்டுமென்றால், 2 ஆஃப் ஸ்பின்னர்களுடன் விளையாடுங்கள் என்று கூறிவிட்டனர். அப்போது தான் முதல்முறையாக ஹர்பஜன் சிங்குடன் இணைந்து விளையாடினேன். அந்த தருணங்கள் எப்போதும் மறக்காது. அதேபோல் கிரிக்கெட் பற்றி அத்தனை விஷயங்களும் அறிந்தவர் அனில் கும்ப்ளே.
இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருந்த போது, அவருடன் ஏராளமான நேரங்கள் செலவிட்டுள்ளேன். நான் பார்த்த மிகச்சிறந்த மனிதர்களில் அனில் கும்ப்ளேயும் ஒருவர். இதுவரை யார் மனதையும் புண்படுத்தாதவர் அனில் கும்ப்ளே. என்னால் அது முடியாது. அவருக்கு பின் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றும் போது, எந்தவொரு உரையாடலிலும் யாரையும் புண்படுத்த தேவையில்லை என்று உணர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.