`ஐயா இந்த Reverse Swing-ன்னா என்னங்கய்யா?’ – பும்ரா கையிலெடுத்திருக்கும் ஆயுதத்தின் சிறப்பம்சங்கள்!
பௌலர்கள் கோலோச்சுவதும், விதிகள் குறுக்கிட்டு அதனை பேட்ஸ்மேனுக்கு சாதகமாகச் சற்றே திருப்புவதும் அதனைத் தங்களது வேரியேஷன்களால் பௌலர்கள் திருத்தி அமைப்பதும் அதனை ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் என பேட்ஸ்மேன்கள் புதுப்புது ஷாட்களால் கையாள்வதும் இங்கே தொடர் கதைதான். அதில் என்றைக்கும் தனக்கான வசீகரம் இழக்காத ஒரு எபிசோட்தான் ரிவர்ஸ் ஸ்விங்.
சுழல்பந்துவீச்சு கண்கட்டு வித்தை என்றால் வேகப்பந்து வீச்சோ விபத்து. பேட்ஸ்மேனுக்குச் சிந்திக்கவே அவகாசம் தராத பேராபத்து, களம் கைகொடுத்தால் புது பந்தும் துணை நின்றால் இன்னமும் அதீத தாக்கத்தை உண்டாக்குவது. சமயத்தில் களம் உயிரற்றதாக உருமாற, பந்தும் தன் பொலிவிழக்க, பின்கட்டத்தில் திறன் படைத்த ஸ்பின்னர்களும் இல்லாமல் போகும்போது, ஆட்டத்தின் சூடு தணிந்து சற்றே தேக்கம் உண்டாகும். அச்சமயத்தில் ஆட்டத்தை உயிர்த்தெழச் செய்து ரசிகர்களை கிளர்ச்சியுற வைப்பதுதான் ரிவர்ஸ் ஸ்விங் என்னும் பேராயுதம்.
அண்டர்ஆர்ம் பௌலிங் இருந்தபோது ஸ்விங் பௌலிங் எல்லாம் வழக்கில் இல்லை. அதன்பின்தான் காற்றியக்கவியலின் (Aerodynamics) அடிப்படைக்கூறுகளை உள்ளடக்கிய ஸ்விங் பௌலிங் உருவானது.
பலகாலம் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்க அது ஒன்றே போதுமானதாக இருந்தது. இருபக்கமும் ஸ்விங் ஆகும் பந்துகள் அவர்களைக் கலங்கடித்தன. அதனையே முழுவதுமாக அவர்கள் புரிந்துணரும் முன்பே வேகப்பந்துவீச்சு விஷயத்தில் பவர் ரேஞ்சர்களான பாகிஸ்தான் `ரிவர்ஸ் ஸ்விங்’ எனும் அடுத்த அஸ்திரத்தை வெளிக்கொணர்ந்தது.