ரோகித் சர்மா தப்பிக்க காரணமே சிராஜ் தான்.. மோசமான கேப்டன்சி இது.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்!

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் ஏராளமான தவறுகள் காரணமாகவே தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ் ச் ரேக்கர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இருப்பினும் 98 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி எய்டன் மார்க்ரமின் அபாரமான சதம் காரணமாக 176 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி வெற்றிபெற 79 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இந்திய அணி 12 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன் மூலமாக டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இதன் மூலமாக தோனிக்கு பின் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை சமன் செய்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மிகச்சிறப்பாக இருந்தது. இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியின் போது ரோகித் சர்மாவுக்காக சோகமடைந்தேன்.
ஆனால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அவர் ஏராளமான தவறுகளை செய்தார். அவரின் தவறுகள் காரணமாகவே இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் தான் ரோகித் சர்மா காப்பாற்றியுள்ளார். அவர் சிராஜ் கைகளில் பந்தை கொடுப்பதற்கு முன் பிரசித் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் கைகளில் பந்தை கொடுத்தார்.
அதன் காரணமாகவே எய்டன் மார்க்ரம் சதம் விளாச முடிந்தது. அதன்பின் சிராஜ் தான் மார்க்ரமை வீழ்த்தி காட்டினார். இரண்டாவது இன்னிங்ஸில் முகேஷ் குமார் தான் சிராஜை விடவும் அதிக ஓவர்களை வீசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் இருவரும் ஒரே அளவிலான ஓவரை தான் வீசி இருக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார்.