பணம் கொடுத்து என்னை சிவகார்த்திகேயன் அவமானப்படுத்தினார் – விஜய் டிவி பிரபலம் உருக்கம்
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு பணம் கொடுத்து அவமானப்படுத்தி விட்டதாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக மாறி இருப்பவர் சிவகார்த்திகேயன். தொடக்க காலத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சிவகார்த்திகேயன், ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
வெள்ளித்திரையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், ரஜினிமுருகன், வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றுள்ள சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
இருப்பினும் தன்னை பிரபலமாக்கிய விஜய் டிவியையும், அதில் இடம் பெற்று வரும் நட்சத்திரங்களையும் மரியாதை செய்வதற்கு சிவகார்த்திகேயன் தவறுவது கிடையாது. அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமாக இருந்த நடிகர் பிளாக் பாண்டி நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனை பார்த்திருக்கிறார். அப்போது அவரிடம் சிவா உன்கிட்ட பேசணும் என்று பழகிய உரிமையில் கூறியுள்ளார். அந்த சூழலில் பிஸியாக இருந்த சிவகார்த்திகேயன் பிளாக் பாண்டியை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் அவரது மேனேஜர் மூலமாக பிளாக் பாண்டிக்கு பண உதவி செய்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதுபற்றி பேசியுள்ள ப்ளாக் பாண்டி சிவகார்த்திகேயன் தனக்கு பணம் கொடுத்தது கஷ்டமாகவும், அவமானமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனிடம் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்கலாம் என்று நினைத்ததாகவும் கூறியுள்ளார்
தனக்கு கை கால்கள் நன்றாக இருக்கும் சூழலில், உதவிக்கு பணம் வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் மேனேஜர் கொடுத்த பணத்தை பிளாக் பாண்டி வாங்கவில்லையாம் . பிளாக் பாண்டி தெரிவித்துள்ள தகவல்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது