Skin Care : குளிர்காலத்தில் சரும பராமரிப்புக்கு உதவும் ஃபேஸ் மாஸ்குகள்! வீட்டிலே தயாரிக்கலாம்!

பனிக்காலத்தில், குளிர்ந்த காற்று வீசும், அதற்கு ஏற்றாற்போல் உடலுக்கு சூட்டை வழங்கக்கூடிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். இந்த காலத்தில் ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, கிவி, வாழைப்பழம், கொய்யா மற்றும் திராட்சை ஆகிய பழங்களும் கிடைக்கும். அவற்றை சாப்பிடும்போது, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இவற்றில் சிலவற்றை நீங்கள் உங்கள் சருமத்துக்கும் உபயோகிக்கலாம். அந்த ஃபேஸ் பேக்குகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஆரஞ்சு ஃபேஸ் பேக்

ஆரஞ்சு, இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இது வயோதிகத்தை கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஆரஞ்சு தோல் பொடியில் சிறிது யோகட் சேர்த்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காய வைத்துவிட்டு பின்னர் மிருதுவான சோப்பில் முகத்தை கழுவவேண்டும்.

ஆப்பிள் ஃபேஸ் பேக்

ஆப்பிள் சருமத்தில் உள்ள அழுக்கை உரித்து எடுக்கும் தன்மை கொண்டது. அது உங்களின் சருமத்தில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும். உங்கள் சருமத்தில் உள்ள முகப்பருவை நீக்க உதவும். ஆப்பிளை துருவி, தேனில் நனைத்து முகத்தில் பூசி 20 நிமிடத்தில் கழுவ வேண்டும். அது உங்கள் சருமத்துக்கு பளபளப்பை தரும்.

மாதுளை ஃபேஸ் பேக்

மாதுளை இயற்கை முறையில் நீர்ச்சத்தை வழங்கக்கூடியது. இதுவும் வயோதிகத்தை எதிர்த்து போராடும். மாதுளையை அரைத்து கடலை மாவில் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் பூசவேண்டும். காய்ந்த பின்னர் கழுவவேண்டும்.

கிவி ஃபேஸ் பேக்

கிவி உங்கள் சருமத்தை முழுவதும் ஒரே டோனில் பராமரிக்கும். கிவி மற்றும் கற்றாழை இரண்டையும் நன்றாக குழைத்து 15 – 20 நிமிடங்கள் முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். காய்ந்த பின் முகத்தை கழுவவேண்டும்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வறண்ட சருமத்துக்கு வாழைப்பழம் நல்லது. அது உங்கள் சருமத்துக்கு ஈரப்பதத்தை வழங்கும். பழுத்த வாழைப்பழத்தை தேனில் குழைத்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.

கொய்யா ஃபேஸ் பேக்

கொய்யாப்பழமும் வயோதிகத்தை குறைக்கும். கொய்யா பழத்தையும், ஓட்ஸையும் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவேண்டும்.

திராட்சை ஃபேஸ் பேக்

திராட்சை பளபளக்கும் சருமத்தை கொடுக்கும். அவற்றை எலுமிச்சைசாறுடன் சேர்த்து இடித்து சருமத்தில் பூசி 15 நிமிடங்களில் அலச வேண்டும்.

பெர்சிமோன் ஃபேஸ் பேக்

பெர்சிமோன் பழம் சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை போக்கும் தன்மை கொண்டது. அது ஒட்டுமொத்த சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும் வல்லமை பெற்றது. இந்த பழத்தை தயிருடன் குழைத்து சருமத்தில் பூசவேண்டும். அதை 20 நிமிடங்கள் வைத்துவிட்டு முகத்தை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

கிரான்பெரி ஃபேஸ் பேக்

முகப்பருக்களை நீக்குவதில் கிரான்பெரி முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தேனுடன் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடத்தில் அலச வேண்டும்.

பப்பாளி ஃபேஸ் பேக்

பப்பாளி, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.எலுமிச்சையுடன் சேர்த்து பப்பாளி பழத்தை சருமத்தில் பூசிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து அலசவேண்டும்.

இந்த அனைத்து ஃபேஸ் பேக்குகளுமே சருமத்தில் நீர்ச்சத்தை அதிகரிக்கக்கூடியவை. இவை சருமத்துக்கு வைட்டமின்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கொடுக்கக்கூடியவை. இவை சருமத்தை மிருதுவாக்குகின்றன. இவை சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கின்றன. வயோதிகத்தையும் தடுக்கிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *