தோல் நோய்களும் ஆயுர்வேதமும்

நன்றி குங்குமம் டாக்டர்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஒருவரின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அவர் முகமே காட்டும் என்பதை இந்த பழமொழியின் மூலம் அறியமுடியும்.
தோல் என்பது மனித உடலின் மிகப்பெரிய உறுப்பாகும். நம் தோலானது நமக்கு அழகைமட்டும் தராமல் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரு பாதுகாப்புக் கவசமாக விளங்கி, உடல் வெப்பத்தை சீர்படுத்தி, உடலுக்குத் தேவையான தண்ணீர், வைட்டமின்கள், கொழுப்பு, அமிலங்கள் போன்றவற்றைச் சேர்த்து வைத்து கொடுப்பதோடு, உடம்பிற்குத் தேவையில்லாத பலவற்றை வியர்வை மூலமாக நீக்கி, நம் உடலின் ஆரோக்கியத்தை காக்கிறது. ஆயுர்வேதத்தின்படி நம் தோலானது ஏழு அடுக்குகளைக் கொண்டுள்ளது. எனவே தோலில் வரும் நோய்களை நம் உடலில் உள்ள நோய்களின் பிரதிபலிப்பாகவே பார்க்கின்றோம்.
இப்பொழுது தோல் பிரச்னைக்கான நவீன மருந்துகள் ஓவர் தி கவுண்டர் எனப்படும் மருத்துவரின் குறிப்பேடு எதுவும் இல்லாமல் மருந்துக் கடைகளில் நாமே வாங்கிக்கொள்ளும் வகையில் மேற்பூச்சு மற்றும் உள் மருந்துகளாக கிடைக்கின்றன. ஆனால், இந்த மருந்துகள் அல்லது மேற்பூச்சு மேலோடு இந்த வியாதிகளை தற்காலிகமாக சரிசெய்வதை போல் தெரிந்தாலும் இவை எந்த ஒரு நிரந்தரத் தீர்வையும் கொடுப்பதில்லை. அவை தோலின் ஆழமான அடுக்குகளை ஒருபோதும் அடையாததால் அறிகுறிகளை மட்டும் தற்காலிகமாக மறைத்துவிட உதவக்கூடும். ஆனால் ஆயுர்வேதத்தில் “நோய்நாடி நோய்முதல்நாடி” என்ற அடிப்படையில், இந்தத் தோல் நோய்க்கான காரணங்களை அறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் வேரறுக்கப்படுகின்றது. ஆகவே ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மூலம் குணமாவதற்கு சில நாட்கள் ஆனாலும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.
அழகு என்பது பெண்கள் சார்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்பட்ட காலம் உண்டு. ஆனால் இன்றோ ஆண், பெண் இருபாலருக்கும் வயது வித்தியாசமின்றி பல அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனாலும் பெண்கள் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகளேதான் உலகம் முழுவதும் அதிகமாக விற்கப்படுகின்றது.
பெண்களுக்கு பல்வேறு வயதுகளில் பல்வேறு தோல் நோய்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. உதாரணமாகக் குழந்தை பருவத்தில் டயாபர் அரிப்பில் ஆரம்பித்து பூப்படையும் காலத்தில் முகப்பரு, 30-40 வயதுகளில் எக்ஸிமா, பின்னர் மாதவிடாய் நிற்கும் தறுவாயில் படர்தாமரை, பாதவெடிப்பு, வயதான காலத்தில் செனிலே ப்ரூரிடஸ் (senile pruritus- பிற மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் அரிப்பு) போன்ற தோல்நோய்கள் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.