சிறிய வெங்காயம் விலை வீழ்ச்சி – ஒரு கிலோ ரூ.32-க்கு விற்பனை @ திண்டுக்கல் சந்தை
திண்டுக்கல்: திண்டுக்கல் சந்தையில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.32 என்ற குறைந்த விலைக்கு விற்பனையாகிறது.
இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மார்க்கெட்டில் கடந்த ஆண்டு சிறிய வெங்காயம் அதிகபட்சமாக கிலோ ரூ.100 வரை விற்பனையானது. வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்த விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்தது. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 ஆக குறைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெங்காய விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மார்க்கெட்டில் முதல் தர வெங்காயம் கிலோ ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் விலை உச்சத்தில் இருந்தபோது விவசாயிகள் பலரும் வெங்காய சாகுபடியை தொடங்கினர். இதனால் சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. 3 மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது வெங்காயம் அறுவடைக்கு வந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை வீழ்ச்சியடைந்துவிட்டது.
இது குறித்து சத்திரப்பட்டியை சேர்ந்த விவசாயி அழகியண்ணன் கூறுகையில், விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய வகையில் கடந்த ஆண்டு விற்பனையான வெங்காயம், இந்த ஆண்டு தொடக்கம் முதலே சரிவை சந்தித்து வருகிறது. விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ வெங்காயத்தை குறைந்தபட்சமாக ரூ.13-க்கு தான் வியாபாரிகள் வாங்குகின்றனர். இதில் இருந்து தரம் பிரித்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
நாற்று நட்டு, தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்து பராமரித்து, அறுவடை செய்வதற்கு கூலி, தோட்டத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு வெங்காயத்தை கொண்டுவர வாகன வாடகை, விற்பனை கமிஷன் என கணக்கு பார்த்தால் வெங்காயத்தை பறிக்காமலேயே விட்டுவிடும் நிலைதான் உள்ளது. செலவிட்ட தொகையை கூட எடுக்க முடியாத நிலையில்தான் விவசாயிகள் உள்ளனர் என்று கூறினார்.
இது குறித்து திண்டுக்கல் வெங்காய வியாபாரி முருகையா கூறுகையில், ஒரு கிலோ வெங்காயம் முதல் தரமானது ரூ.32 வரை நேற்று மொத்த மார்க்கெட்டில் விற்பனையானது. கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும் தமிழகத்தின் ராசிபுரம், துறையூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வெங்காயம் வந்துள்ளது. ஆனால், தேவை குறைவு காரணமாக வெங்காயத்தை மொத்தமாக வாங்கிச் செல்லும் வியாபாரிகள் குறைவாகவே வாங்குவதால் மார்க்கெட்டில் வெங்காயம் தேக்கமடைந்துள்ளது என்று கூறினார்.