19 வயதில் இவ்வளவு திறமையா.. ஆஸ்திரேலியா கேப்டனை மிரளவிட்ட நமன் திவாரி.. ஆட்டத்தை மாற்றிய பந்து!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் நமன் திவாரி ஆட்டத்தையே மாற்றியுள்ளார்.
யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வெய்ப்கென் பேட்டிங்கை தேர்வு செய்தார். சீனியர் உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இதில் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி தரப்பில் டிக்சன் – கோன்ஸ்டாஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை ராஜ் லிம்பானி வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட, 2வது ஓவரை வீசிய நமன் திவாரி பந்தில் 15 ரன்களை டிக்சன் விளாசி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து ராஜ் லிம்பானி வீசிய 3வது ஓவரில் பந்தில் கோன்ஸ்டாஸ் டக் அவுட்டாகி வெளியேறினார்.
ஆனால் ஒரேயொரு ஓவரை மட்டும் வீசியிருந்த நமன் திவாரி அட்டாக்கில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். இதனால் நமன் திவாரிக்கு பதிலாக ஸ்பின்னரான சவுமி பாண்டே அட்டாக்கில் வந்தார். தொடர்ந்து டிக்சன் – கேப்டன் வெய்ப்கென் கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தியது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் சேர்த்தது.
ஸ்பின்னர்களுக்கு பிட்சில் போதுமான உதவி கிடைக்காத நிலையில், கேப்டன் உதய் சஹாரன் மீண்டும் நமன் திவாரியை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே மீண்டும் பவுண்டரி அடிக்கப்பட, 2வது பந்தில் மீண்டும் பவுண்டரிக்கான முயற்சி நடந்தது. ஆனால் அந்த பந்து ஓரளவிற்கு கேட்ச்சிற்கு சென்றதால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதல் 3 பந்துகளையும் ஷார்ட்டாக பவுன்ஸ் கொடுத்து வீசிய நமன் திவாரி, 4வது பந்தில் ஃபுல் லெந்தில் வீசினார்.
அந்த பந்தை பாய்ண்ட் திசையில் பவுண்டரியாக்க நினைத்து கேப்டன் வெய்ப்கென் அடிக்க, அது நேராக முஷீர் கான் கைகளில் புகுந்தது. இதனால் ஆஸ்திரேலியா கேப்டன் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து மீண்டும் 23வது ஓவரை வீச வந்த நமன் திவாரி நல்ல வேகத்தில் பந்தை வீசினார். இந்த போட்டியின் முதல் ஸ்பெல்லில் நமன் திவாரியை டிக்சன் வெளுத்து கட்டினார். இதனால் இவர்கள் இருவருக்கும் மறைமுக யுத்தம் களத்தில் நடந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் அவர் வீசிய 23வது ஓவரின் 5வது பந்தை ஸ்லோ பவுன்சராக வீச, அதனை கணிக்காமல் பேட்டை டிஃபென்சிவாக ஆடினார் டிக்சன். இதனால் பந்து கொஞ்சம் உயர பறக்க, அருகில் நின்றிருந்த முருகன் அபிஷேக் தரமான கேட்சை பிடித்து அசத்தினார். அடுத்தடுத்த ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்திய அணி பக்கம் நமன் திவாரி திருப்பியுள்ளார். 23 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.