எகிறிய ஹார்ட்பீட்.. கடைசி பந்தில் நடந்த ட்விஸ்ட்.. உபி-யை பொளந்த சோபனா ஆஷா
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை வெற்றியாளர் யார் எனத் தெரியாததால் கடைசி பந்தில் இரண்டு அணிகளுக்கும் இதயத் துடிப்பு எகிறியது.
பெங்களூர் அணி கடைசி பந்தில் சரியாக செயல்பட்டு 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உபி வாரியர்ஸ் அணியின் 5 விக்கெட்களை சாய்த்து போட்டியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார் பெங்களூர் அணியின் சோபனா ஆஷா.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு மேகனா 53 ரன்களும், ரிச்சா கோஷ் 62 ரன்களும் குவித்து ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய உபி வாரியர்ஸ் அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்வேதா இணைந்து 50 ரன்களுக்கும் மேல் கூட்டணியாக ரன் சேர்த்தனர். எனினும், அதன் பின் விக்கெட்கள் சரியத் துவங்கின. பெங்களூர் அணியின் சோபனா ஆஷா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
கடைசி ஓவரில் உபி அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலைக்கு சென்றது போட்டி. அப்போது மோலினேக்ஸ் பந்து வீசினார். முதல் நான்கு பந்துகளில் ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர் உபி அணியின் எக்செல்ஸ்டன் மற்றும் தீப்தி சர்மா. ஐந்தாவது பந்தில் தீப்தி சர்மா ஒரு ஃபோர் அடித்தார். இதை அடுத்து கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முந்தைய மும்பை இந்தியன்ஸ் போட்டி போல, கடைசி பந்தில் தீப்தி சிக்ஸ் அடித்து வெற்றி தேடிக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் தீப்தி. இதை அடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி போட்டியில் வெற்றி பெற்றது.