தமிழச்சி, பொன்முடி மகன்.. திமுகவின் 4 டாப் தலைகளுக்கு குறி வைத்த காங்கிரஸ்.. கூட்டணியில் நெருக்கடி
சென்னை; திமுக ஏற்கனவே எம்பியாக இருக்கும் முக்கியமான தொகுதிகளை இந்த முறை காங்கிரஸ் கேட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு திமுகவிடம் 21 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளது.
ஏற்கனவே வென்ற 9 தொகுதிகள் + 12 தொகுதிகள் என்று கூடுதலாக கேட்டுள்ளது. அதன்படி
ஏற்கனவே வென்ற தொகுதிகளான,
1. திருவள்ளூர் (SC)
2. கிருஷ்ணகிரி
3. ஆரணி
4. கரூர்
5. திருச்சிராப்பள்ளி
6. சிவகங்கை.
7. தேனி:
8. விருதுநகர்:
9. கன்னியாகுமரி
அதேபோல் இப்போது திமுக மற்றும் திமுக கூட்டணி இருக்கும்,
1. திருநெல்வேலி
2. ராமநாதபுரம்
3. தென்காசி (SC)
4. திண்டுக்கல்
5. திருவண்ணாமலை
6. தஞ்சாவூர்
7. மயிலாடுதுறை
8. பெரம்பலூர்
9. கள்ளக்குறிச்சி
10. காஞ்சிபுரம் (SC)
11. தென் சென்னை
12. அரக்கோணம்
இதில் தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் இருக்கும் தொகுதி, தஞ்சாவூர் எஸ்எஸ் பழனிமாணிக்கம் இருக்கும் தொகுதி, கள்ளக்குறிச்சி பொன்முடி மகன் கவுதம் சிகாமணி இருக்கும் தொகுதி., ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி இருக்கும் தொகுதி ஆகும். இந்த 4 முக்கியமான தொகுதிகளை காங்கிரஸ் இந்த முறை குறி வைத்துள்ளது.
பேச்சுவார்த்தை; இன்று மாலை 3 மணிக்கு திமுக – காங்.முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கவிட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன்உடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.
குழு உறுப்பினர்கள் : கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எத்தனை இடங்கள்: 2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு கடந்த முறை போல 10 இடங்களை கொடுக்காமல் 7 இடங்களுக்குள் சுருக்கும் முடிவில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் சமீபத்தில் காங்கிரசின் தோல்வி.. திமுகவிற்கு கூட்டணி ரீதியாக அதிக பவரை கொடுத்துள்ளதாம்.