மாநிலங்களவை எம்.பி ஆகிறார் சோனியா காந்தி.. இன்று ராஜஸ்தானில் மனு தாக்கல்..
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான விரைவில் வெளியாக உள்ள நிலையில் தேசிய அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே வரும் பிப்ரவரி 27-ம் தேதி 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் தேர்வு குறித்து அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு செய்யப்படுகிறார். இவர் தற்போது உத்தர பிரதேசத்தின் ரே பரேலி மக்களவை தொகுதி எம்.பியாக உள்ளார்.
இந்த சூழலில் அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மனுதாக்கல் செய்ய இன்று காலை அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் சென்றுள்ளார். இன்றைய தினமே சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளது உறுதியாகி உள்ளது.
சோனியாவின் சொந்த தொகுதியான ரே பரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. தற்போது 77 வயதாகும் சோனியா காந்தியின் உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் மக்களவை தேர்தலில் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ரே பரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாக பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் 2004 முதல் சோனியா காந்தி இந்த தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். 2004, 2009, 2014, 2019 என 4 முறை சோனியா ரே பரேலி தொகுதி தொகுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.