மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் சூதுகவ்வும் 2 படம்!

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான சூதுகவ்வும் சிறந்த பிளாக் க்யூமர் திரைப்படமாக ரசிகர்களை மகிழ்வித்தது. இதனை தயாரித்த சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் இதன் இரண்டாவது பாகத்தை தயாரித்து வருகிறது.
இந்த இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. அவருக்குப் பதில் மிர்ச்சி சிவா நடித்து வருகிறார். சூதுகவ்வும் படத்தில் நடித்த கருணாகரன், ராதாரவி போன்ற ஒருசிலர் இரண்டாவது பாகத்திலும் நடிக்கின்றனர். சத்யராஜ் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கயிருக்கிறார். இரண்டாம் பாகத்துக்கு, சூதுகவ்வும் – நாடும் நாட்டு மக்களும் என்று பெயர் வைத்துள்ளனர்.
சூதுகவ்வும் படத்தின் வெற்றிக்கு நலன் குமாரசாமியின் கதையும், திரைக்கதையும், கதாபாத்திர வடிவமைப்பும், வசனங்களும் முக்கிய காரணங்களாக அமைந்தன. அவர் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை. முதல் பாகத்தில் சமூகத்தின் அபத்தப்போக்கினை நலன் குமாரசாமி படம்நெடுக கோடிட்டுக் காட்டியிருப்பார். இன்றைய அரசியல் நிலையையும் விமர்சித்திருப்பார். அனைத்தும் நகைச்சுவை இழையோட திரைக்கதையில் கலந்திருக்கும். குறிப்பாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அத்தனை புதிதாக எழுதப்பட்டிருக்கும். சஞ்சிதா ஷெட்டியின் கதாபாத்திரத்தையும் புத்திசாலித்தனமாக படத்தில் வைத்திருப்பார். இரண்டாம் பாகத்தில் இதுபோன்ற செறிவான கதையும், கதாபாத்திர வடிவமைப்பும் இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்துக்கும் இப்படி இரண்டாம் பாகம் எடுத்தார் சி.வி.குமார். அது முதல் பாகத்தின் பெயரை கெடுப்பதாக அமைந்தது. அப்படியொரு விபத்தை சூதுகவ்வும் – நாடும் நாட்டு மக்களும் ஏற்படுத்தாது என்று நம்புவோம்.