விரைவில் 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டம் அமல் ..?
மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. புதிய கல்விக் கொள்கையின் படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு ஒரு சில மாநில அரசுகள் எதிர்ப்பு காட்டி வந்த நிலையில் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டு முதல் பெருவாரியான மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய கல்வி அமைச்சகமானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில் வரும் 2024 – 25 ஆம் கல்வியாண்டில் இருந்து 3, 4 மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளியில் சேரும்போது உள்ள வயது விவரங்கள் குறித்த தகவல்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரீ.கே.ஜி படிப்பில் சேர, மாணவர்களுக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எல்.கே.ஜி படிப்பிற்கு நான்கு வயதும், யு.கே.ஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.