சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜன.12 வரை சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம்
சென்னை: கூட்டுறவுத்துறையின் மூலம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறுவணிகர்களுக்கு “முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” சிறப்பு முகாம் நாளை (ஜன.5) முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
தமிழக முதல்வர் அறிவுரையின்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறு வணிகர்களின் தொழில் பயன்பாட்டிற்கான இயந்திரங்களை பழுதுபார்க்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் ‘முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்’ எனும் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் காஞ்சிபுரம். திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை ரூ.10,000/- வரை வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெருவியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் (புயலால் பழுதடைந்த ஆட்டோவினை சீரமைக்க), அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் ஆகிய சிறு வணிகர்கள்/சிறு, குறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்.
இக்கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200/- என்ற அடிப்படையில் ஒரு வருட காலத்திற்குள் உரிய வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் அல்லது மாதந்தோறும் ரூ.1000/- வீதம் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்தலாம். ‘முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்’ முகாம்கள் நான்கு மாவட்டங்களிலும் 05.01.2024 முதல் 12.01.2024 வரை நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளான தியாகராய நகர் ரோட்டில் செயல்பட்டு வரும் பாண்டிபஜார் கிளை, திருவல்லிக்கேணி, சிங்கராசாரி தெருவில் செயல்பட்டு வரும் திருவல்லிக்கேணி கிளை, அசோக் நகர், 4 வது அவென்யூவில் செயல்பட்டு வரும் அசோக் நகர் கிளை, அண்ணா நகர், முதல் மெயின்ரோட்டில் செயல்பட்டு வரும் அண்ணா நகர் கிழக்கு கிளை, ஆதம்பாக்கம் செக்ரடேரியட் காலனியில் செயல்பட்டு வரும் ஆதம்பாக்கம் கிளை, பெரியார் நகர், கார்த்திகேயன் காலனியில் செயல்பட்டு வரும், பெரியார் நகர் கிளை, பிராட்வே, பிரகாசம் சாலையில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் என 7 இடங்களில் நடைபெறவுள்ளது.