அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை.! 9 பிரிவில் வழக்கு- கைது செய்ய அதிரடியாக களத்தில் இறங்கிய போலீஸ்

சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள் பாஜகவில் மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார். கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இதனையொட்டி சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது கூறி பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஆட்களை அழைத்து வராத காரணத்தால் ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவி மற்றும் அவரது தங்கை ஆண்டாளை சரமாரி தாக்கியுள்ளனர். அப்போது அமர்பிரசாத் ரெட்டியிடம் இருந்து நீங்கள் வாங்கி வந்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்டதுடன் இதனை வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. மேலும் அமர் பிரசாத் ரெட்டி சொன்னதன் காரணமாகத்தான் உங்களை அடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காயமடைந்த தேவியை அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தேவி அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுனர் ஸ்ரீதர் மற்றும் பாஜக நிர்வாகி நிவேதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பாஜக துணைத் தலைவர் ஸ்ரீதர், பாஜக பெண் நிர்வாகிகள் நிவேதா கஸ்தூரி உள்ளிட்டோர் மீது மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக 147 சட்ட விரோதமாக கூடுதல் , 323 காயம் ஏற்படுத்துதல், 324 ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சைதாப்பேட்டை கிழக்கு மண்டல் பாஜக துணை தலைவர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *