6 மாதத்தில் 111% லாபம் கொடுத்த ஸ்பைஸ்ஜெட்.. பங்கு மூலதனத்தை அதிகரித்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.
நாட்டின் முன்னணி விமான போக்குவரத்து சேவை நிறுவனங்களில் ஒன்று ஸ்பைஸ்ஜெட் லிமிடெட். இந்நிறுவனம் உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் 13 சதவீத சந்தை பங்கை கொண்டுள்ளது.
ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக 3வது பெரிய விமான போக்குவரத்து சேவை நிறுவனமாக விளங்குகிறது.
இந்நிறுவனம் ஒரு வலுவான விமான சேவையை உருவாக்கும் நோக்கில், கோ பர்ஸ்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவதில் விருப்பம் தெரிவித்தது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வர்த்தகம், வருவாயை விரிவுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்திக்கு சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில், நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்புதலை பிஎஸ்இ-யிடம் இருந்து பெற்றுள்ளது.பிஎஸ்இ மற்றும் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பங்குகள் மற்றும் வாரண்டுகள் மூலம் திரட்டும் ரூ.2,242 கோடி நிதியுதவிடன் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஸ்பைஸ்ஜெட் செல்ல தொடங்கியுள்ளது.ரூ.70க்கு கீழ் உள்ள இந்த பென்னி பங்கில் 2023 டிசம்பரில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்கு மூலதனத்தை உயர்த்தியுள்ளனர்.
இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது.மும்பை பங்குச் சந்தையின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு ரூ.1,503 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.அதேசமயம் 2023 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.204 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. ஆனால் அதற்கு அடுத்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.431 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது.