ஊழியர்கள் பணிநீக்கம் செய்த கையோடு 10 விமானங்களை குத்தகைக்கு எடுத்த ஸ்பைட்ஜெட்..!
இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்கம், சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 10 விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியாவில் கோடைகாலம் தொடங்கும் நிலையில் தேவை அதிகரிக்கும் என்பதை கணக்கில் கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளது.
இந்தியாவில் கோடை காலம் நெருங்குகிறது, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் மக்கள் குடும்பத்துடன் வெளியூர்களுக்கு பயணம் செய்வர். இதனால் விமான பயணங்களும் அதிகரிக்கும். இதனை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்,10 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கான பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், மூன்று நிறுவனங்களுடனான பிரச்னையை தீர்த்து 685 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது. இத்தகைய நேர்மறை தகவல்களால் பங்குச்சந்தையில் ஸ்பைஸ்ஜெட்டின் மதிப்பு உயர்ந்தது.
மார்ச் 14ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் ஸ்பைஸ்ஜெட்டின் பங்கு மதிப்பு 7.43% சதவிகிதம் அதிகரித்து 54.11 ரூபாய் என வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 3,447 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத்தின் வருவாய் 9,897 கோடி ரூபாயாகவும் நிறுவனத்தின் லாபம் மைனஸிலும் உள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்குகளில் 55.28% புரமோட்டர்களிடமும் 44.40% சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் உள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அண்மையில் மூத்த அதிகாரிகள் மூன்று பேரை பணி நீக்கம் செய்தது. நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்படும் வகையில் விமான அட்டவணைகளை மாற்றி அமைத்ததாக மூன்று பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்தது. அது மட்டுமின்றி எக்லான் அயர்லாந்து மெடிசன் ஒன் நிறுவனத்துடன் 413 கோடி ரூபாய், கிராஸ் ஓசன் பார்ட்னர்ஸுடன் 93 கோடி ரூபாய் , செலஸ்டியல் ஏவியேசன் நிறுவனத்துடன் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பிரச்னைகளுக்கு தீர்வு கண்டது.
விமான செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக பங்குகளை விற்பனை செய்வதென முடிவு செய்துள்ள ஸ்பைஸ்ஜெட் இதன் மூலம் 2,250 கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்துள்ளது. பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தொடங்கி இருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாயை சேமிக்கும் விதமாக சுமார் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது, இந்நிலையில் நிறுவன வருவாயை அதிகரிக்கும் பொருட்டு மூத்த அதிகாரிகள் பலர் அண்மையில் ராஜினாமா செய்தனர்.