புதிய நடிகர்களுடன் பிரமாண்டமாக வெளியாகும் சுழல் 2

இந்தி இணையத் தொடர்கள் சர்வதேச அளவில் போட்டிப் போடுகின்றன. தெலுங்கில் வெளியான சில இணையத் தொடர்களும் தரத்தில் சிறந்திருந்தன. மலையாளத்தில் வெளியான கேரளா க்ரைம் ஸ்டோரியும் விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
அப்படியே தமிழுக்கு வந்தால், இணையத் தொடர்கள் இன்னும் சவலைக் குழந்தையாகவே உள்ளன. அபூர்வமாக விலங்கு, வதந்தி போன்றவை பேசப்பட்டன. தேசிய அளவில் பேசப்பட்ட முதல் இணையத் தொடர் என்றால், கதிர், பார்த்திபன் நடித்திருந்த சுழல். அமேசானில் வெளியான இந்த இணையத் தொடர், இந்தியாவுக்கு வெளியேயும் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது.
சுழல் முதல் சீஸன் வெற்றி பெற்ற உடனேயே இரண்டாம் சீஸனை அறிவித்தனர். அதன் படப்பிடிப்பு முடிந்து, இந்த வருட இறுதிக்குள் அமேசானில் வெளியாக உள்ளது. முதல் சீஸனில் கதிர், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், கோபிகா ரமேஷ், நிவேதிதா சதீஷ், லதா ராவ், ஹரிஷ் உத்தமன், பிரேம், குமரவேல், சந்தான பாரதி நிதிஷ் வர்மா, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடித்திருந்தனர்.
முதல் சீஸனில் நடித்த கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாவது சீஸனிலும் நடித்துள்ளனர். அவர்களுடன் லால், மஞ்சிமா மோகன், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா ப்ளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோரும் புதிதாக நடித்துள்ளனர்.
முதல் சீஸன் வரவேற்பைப் பெற்றதால், இரண்டர் சீஸனுக்கு பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த வருடம் இரண்டாம் பாதியில் இரண்டாவது சீஸன் ஒளிபரப்பாகும் என அமேசான் ஓடிடி தளம் அறிவித்துள்ளது.