Spirit Airlines: தனியாகப் பயணித்த 6 வயது குழந்தை; வேறு விமான நிலையத்தில் தரையிறக்கம்… யார் தவறு?
தன் பாட்டியைப் பார்க்க விமானத்தில் பயணித்த 6 வயது குழந்தை, விமான ஊழியர்களின் கவனக்குறைவால் பல மைல்கள் தள்ளித் தரையிறக்கப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ஃபுளோரிடாவின் ஃபோர்ட் மியர்ஸில் வசித்து வருகிறார் மரியா ரமோஸ். இவரின் பேரன் கேஸ்பர் அவரை சந்திக்க ஸ்பிரிட் ஏர்லைன்ஸில் (Spirit Airlines) பயணித்து இருக்கிறார். பிலடெல்பியாவிலிருந்து தென்மேற்கு ஃபுளோரிடா விமான நிலையத்திற்கு அந்தக் குழந்தை டிராவல் செய்வதாக இருந்தது.
ஆனால், குழந்தை தரையிறங்கிய போது அங்கு வரவேற்க யாரும் இல்லை. குழந்தை, ஆர்லாண்டோ விமான நிலையத்தில் தவறுதலாக தரையிறக்கப்பட்டிருந்தது.
ஃபுளோரிடா விமான நிலையத்தில் காத்திருந்த குழந்தையின் பாட்டி, தரையிறங்கிய விமானத்தில் குழந்தை இல்லை என்றவுடன் அதிர்ச்சியடைந்துள்ளார். விமானம் முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. விமான ஊழியர்களிடம் விசாரிக்கையில், `அப்படி ஒரு குழந்தை விமானத்தில் பயணிக்கவில்லை’ என பதில் கிடைத்திருக்கிறது.
ஆர்லாண்டோவில் தரையிறங்கிய குழந்தை, தன் பாட்டியை அழைத்துள்ளது. அதன்பிறகு தன் பேரனைக் காண ஃபோர்ட் மியர்ஸில் இருந்து கிட்டத்தட்ட 160 மைல்கள் பயணித்து குழந்தையிடம் சென்று சேர்ந்துள்ளார்.
`என் வாழ்விலேயே மிகவும் திகிலூட்டும் அனுபவம்’ என மரியா ரமோஸ் இந்தச் சம்பவத்தைக் கூறியிருக்கிறார்.
அவர் பயணத்திற்கான செலவை விமான நிறுவனம் கொடுக்க முன்வந்தது. இருந்தாலும் தவறு நடந்ததற்கான காரணத்தை அளிக்குமாறு ரமோஸ் கேட்டுள்ளார்.
`குழந்தை எப்போதும் ஒரு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் குழு உறுப்பினரின் மேற்பார்வையில் இருந்தது. ஆனாலும் குழந்தை தவறுதலாக ஆர்லாண்டோவிற்கு பயணித்தது.
அவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் சேர்க்க உதவினோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கிறோம். இந்த அனுபவத்திற்காக குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கிறோம்’ என்று ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.