இந்த இரு ஐரோப்பிய நாட்டவர்களுக்கான இலவச விசாக்களை நிறுத்தியுள்ள இலங்கை: விரிவான தகவல்
கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கியிருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டவர்களுக்கான இலவச விசாக்களை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை நிர்வாகம் அனுமதி
பிப்ரவரி 2022ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, ரஷ்யர்களையும் உக்ரேனியர்களையும் விசாவிற்கு பணம் செலுத்தாமல் நாட்டில் தங்க இலங்கை நிர்வாகம் அனுமதித்துள்ளது, ஆனால் அவர்கள் தற்போது விசா கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றே கூறப்படுகிறது.
அவர்கள் இலங்கையில் தங்க விரும்பினால், 30 நாள் விசாவிற்கு சுமார் 50 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் தங்கியிருக்க விரும்புவோர் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். 50 டொலர் கட்டணம் செலுத்தி உடனடியாக விசாவைப் புதுப்பித்துக்கொண்டு அவர்கள் இங்கேயே தங்கியிருக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரஜைகளுக்கான இலவச நீண்ட கால விசா திட்டத்தை முடித்துக் கொள்வதாக கடந்த வாரம் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் புதிய விசா இல்லாதவர்கள் வெளியேறுவதற்கு மார்ச் 7 காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
மார்ச் 31 வரை இலவச விசா
ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் சுமார் 300 முதல் 400 ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கையானது பொதுவான சுற்றுலாப்பயணிகளுக்கு பொருந்தாது என்றும் விளக்கமளித்துள்ளனர்.
பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இலங்கைக்கு அதிகமாக வருபவர்கள். 2024ல் மட்டும் இதுவரை 400,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கை ஈர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோசமான நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் புதிய திட்டத்தின் கீழ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மார்ச் 31 வரை இலவச விசா வழங்கப்படும் என்றே இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.