எஸ்எஸ் ராஜமௌலியின் மகன் தயாரிப்பில் நடிக்கும் ஃபகத் ஃபாசில்!
ஓடிடியின் வருகை காரணமாக ஒரு மொழியின் சிறந்த திரைப்படங்கள் பிற மொழி ரசிகர்களால், சப் டைட்டில் உதவியுடன் பார்க்கக் கூடிய வசதி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகம் பயனடைந்தது மலையாள திரையுலகம்.
இங்கு தயாராகும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் அதன் தரம் மற்றும் கன்டென்ட் காரணமாக இந்திய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளது. மலையாள நடிகர்களும் தேசிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் ஃபகத் ஃபாசில்.
மலையாளப் படங்களுடன் தமிழ், தெலுங்குப் படங்களிலும் ஃபகத் ஃபாசில் நடித்து வருகிறார். தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்தவர், புஷ்பா 2 படத்தில் படம் நெடுகவரும் வில்லன் வேடத்தை ஏற்றுள்ளார். அத்துடன் இரு படங்களில் நாயகனாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்களை பாகுபலி படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து எஸ்எஸ் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா தயாரிக்கிறார்.
கார்த்திகேயா மலையாளப் படம் பிரேமலுவின் மொழிமாற்று உரிமையை வாங்கி அதனை தெலுங்கில் வெளியிட்டார். மார்ச் 8 வெளியான படம் பத்து தினங்களில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து லாபத்தை கொட்டி வருகிறது. இதையடுத்து தயாரிப்பில் இறங்கியுள்ளார். பிரேமலு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசிலை இரு படங்களிலும் நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த இரண்டில் ஒரு படத்துக்கு, டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபேன்டஸி திரைப்படமான இதனை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யேலெட்டி இயக்குகிறார். நட்பை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு படத்துக்கு ஆக்சிஜன் என பெயர் வைத்துள்ளனர். இதனை அறிமுக இயக்குநர் சித்தார்த் நாதெல்லா இயக்குகிறார்.
அப்பா ராஜமௌலி இயக்கத்தில் கலக்கிக் கொண்டிருக்கையில் மகன் கார்த்திகேயா ஒரே நேரத்தில் இரண்டு படங்களுடன் தயாரிப்பில் இறங்கியுள்ளார். இரண்டிலும் ஃபகத் ஃபாசில் ஹீரோ என்பதால், ரசிகர்களிடையே இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.