எம்ஜிஆர், விஎன் ஜானகி முதல்முறை இணைந்து நடித்த படத்தின் கதையை எழுதிய எஸ்டி சுந்தரம்
69 ஆண்டுகளுக்கு முன் 1953 டிசம்பர் நான்காம் தேதி சிவாஜி கணேசன் மாதுரி தேவி நடித்த மனிதனும் மிருகமும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எஸ்டி சுந்தரம் எழுதியதோடு கே வேம்புடன் இணைந்து படத்தை இயக்கவும் செய்தார். ஜி கோவிந்த ராயலு நாயுடு இசையமைத்த இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எஸ்டி சுந்தரம் எழுதினார். அத்துடன் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கவும் செய்தார். 1952 ல் பராசக்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த நடிகர் திலகத்திற்கு இது ஒன்பதாவது திரைப்படமாக அமைந்தது. தமிழர்களின் துரதிஷ்டம் இந்தத் திரைப்படத்தின் பிரதிகள் இப்போது யாரிடமும் இல்லை.
எஸ் டி சுந்தரத்தின் முழுப் பெயர் சேலம் துரை சாமி ஐயா சுந்தரம். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921 ஜூலை 22ஆம் தேதி பிறந்தார். சின்ன வயதிலேயே பாடல்களை மனப்பாடம் செய்வதில் வல்லவராக இருந்தார். தனது பனிரெண்டாவது வயது முதல் நவாப் இராஜமாணிக்கத்தின் நாடக சபாவில் நடிக்க ஆரம்பித்தார். 1934 நவாப் இராஜமாணிக்கம் இவரை திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்த்தார். அங்கு தமிழ் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
1942 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது கவியின் கனவு என்ற நாடகத்தை எழுதினார். சுதந்திர இந்தியா பற்றிய அவரது கனவை இந்த நாடகத்தில் வலுவாக பிரதிபலித்திருந்தார். சிறையிலிருந்து திரும்பியபின் மீண்டும் நாடகத்தில் நடிக்கத் தொடங்கியவர் 1945இல் நவாப் இராஜமாணிக்கத்தின் அனுமதி உடன் சக்தி கிருஷ்ணசாமி உடன் இணைந்து சக்தி நாடக சபாவை தொடங்கினார். கவியின் கனவு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதில் சிவாஜி கணேசன் எம் என் நம்பியார் எஸ்வி சுப்பையா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்தனர். 1500 முறைகளுக்கு மேல் அந்த நாடகம் மேடை ஏறியது. நாகப்பட்டினத்தில் அந்த நாடகம் நடைபெற்ற போது கவியின் கனவு ஸ்பெஷல் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து இயக்கப்பட்டது.
1942-ல் எம்ஜிஆர், வி என் ஜானகி முதல்முறையாக இணைந்து நடித்த மோகினி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் கதை வசனத்தை எஸ்டி சுந்தரம் எழுதியிருந்தார். 1953 இல் சிவாஜிகணேசன் நடித்த மனிதனும் மிருகமும் படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்களை எழுதியதோடு கே வேம்புடன் இணைந்து படத்தை இயக்கவும் செய்தார். 1962 இல் இந்தியா சீனா போரின் போது சிங்க நாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது என்ற ஆவணப்படத்தை தனது சொந்தச் செலவில் எடுத்து வெளியிட்டார். இதில் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். பட்டி தொட்டி எங்கும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நாடக ஆசிரியர், நடிகர், வசனகர்த்தா, கதாசிரியர், இயக்குனர், கவிஞர் என பல்துறை வித்தகராக திகழ்ந்த எஸ்டி சுந்தரம் 1964 முதல் 1968 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1968 முதல் 1976 வரை திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும் பதவி வகித்தார். 1979 மார்ச் 10ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.
தமிழ் நாடக, சினிமா, இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத பெயர் எஸ்டி சுந்தரம். அவரது படைப்புகள், அவர் பணிபுரிந்த மனிதனும் மிருகமும் போன்ற திரைப்படங்கள் இன்று பிரதிகள் இன்றி வெறும் பெயர்களாக மட்டுமே எஞ்சியுள்ளன. காலத்தையும், மனிதர்களையும் நினைவு கூர்பவை அவர்களின் படைப்புகள். அவை நம்மிடம் இல்லாமல் போவது ஒரு இனத்தின் துரதிர்ஷ்டம்.