தூத்துக்குடி பிரதமர் நிகழ்வில் கலந்து கொள்ளாத ஸ்டாலின்.! விழாவில் கனிமொழி, ஏ.வ.வேலுவை தவிர்த்த மோடி
நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு சார்பாக தமிழகத்தில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களில் பிரதமர் மோடி 3வது முறையாக தமிழகம் வந்துள்ளார். அடுத்த மாதம் 4ஆம் தேதியும் சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் நேற்று கோவை வந்த பிரதமர் மோடி பல்லடத்தில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற மோடி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்
இதனை தொடர்ந்து மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் மோடி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டினார். ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை உள்ளிட்ட ஒட்டு மொத்தமாக தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஏ.வ வேலு, கனிமொழியை கண்டு கொள்ளாத மோடி
இந்த நிகழ்ச்சியில்முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இறுதியாக தமிழக அரசு சார்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது ஆளுநர் ரவி, அமைச்சர் எல்.முருகன் மற்றும் பல்வேறு துறைகளின் அமைச்சர்களின் பெயர்களை கூறிய மோடி, தமிழக அமைச்சர் ஏ வ வேலு மற்றும் கனிமொழி பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தார்.