அன்று ஸ்டாக்கிங், இன்று டாக்சிக்… தமிழ் சினிமாவில் காதல் ‘வைரஸ்’ | காதலர் தின சிறப்புப் பகிர்வு
‘மச்சா அந்த பொண்ணோட ஃபுல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்றோம். நாளைல இருந்து ஃபாலோ பண்றோம்’ என்பது தான் தமிழ் சினிமா ஹீரோக்களின் உயர்ந்த லட்சியமும் குறிக்கோளும்.
மற்ற எல்லா வேலைகளைவிடமும் முக்கியமான வேலையாகவும், வாழ்வின் நோக்கமாகவும் கொண்டு விடாமுயற்சியாக பெண்ணை துரத்தி, காதலித்து, அவர் மறுப்பை ‘அடிடா அவள, வெட்றா அவள, ஒதடா அவள தேவையே இல்ல’ என வன்முறையாக்கி, இறுதியில் அவரை அடைந்தே தீருவதே கோலிவுட் சொல்லிக் கொடுத்த ‘புனித’ காதல் கதைகள். ‘ஸ்டாக்கிங்’கை தங்களது கடின உழைப்பின் மூலம் ‘நார்மலைஸ்’ செய்த தமிழ் சினிமா இயக்குநர்கள் இப்போது வெகுவாக மாறிவிட்டனர்.
‘மௌன ராகம்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மின்னலே’, ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘காதலன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘மயக்கம் என்ன’, ‘ரெமோ’, ‘சிவாஜி’, ‘குட்டி’ என அடிஷ்னல் சீட் வரை ‘ஸ்டாக்கி’ படங்களின் பட்டியல் நீளும். செல்வராகவனின் படங்கள் இதனை தெரிந்தோ, தெரியாமலோ ஊக்குவித்தே வந்துள்ளன. ‘7ஜி ரெயின்போ காலனி’ காதல் என்ற போர்வைக்குள் ஒளித்துவைக்கப்பட்ட ஸ்டாக்கிங் கதைக்களம் கொண்ட திரைப்படம்.
‘காதல் கொண்டேன்’ படத்தையும் இந்த லிஸ்டில் தாராளமாக சேர்த்துக்கொள்ள முடியும். போலவே ‘மயக்கம் என்ன’ சொல்லவே தேவையில்லை. ‘வெட்ட’ச் சொனன ஒருவனை காதலனாக ஏற்று திருத்தும் கதை. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ போன்ற வெற்றிமாறன் படங்களிலும், இந்த பிரச்சினைகள் இருப்பதை உணரமுடியும். ‘ஸ்டாக்கிங்குக்கு’ தமிழில் ‘வாங்க பழகலாம்’ என புது வார்த்தையை கண்டுபிடித்து ‘சிவாஜி’ படத்தில் பயன்படுத்தினார் ரஜினி.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தின் அதீத டார்ச்சர் விமர்சகர்களால் கண்டிக்கப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் என தெரிந்தும் விடாப்பிடியாய் இருக்கும் நாயகன், ‘பிடிக்கவில்லை’ என்று சொன்ன நாயகியின் உணர்வுகளை மதிக்காமல், மாறுவேடமிட்டு, துரத்திச் சென்று லவ் டார்ச்சர் செய்தது, தான் நினைத்ததை சாதிக்க துடிப்பது சைக்கோத்தனம். படத்தின் சில ஜிகினா சீன்களை கலைத்துவிட்டுப் பார்த்தால், கீர்த்தி சுரேஷின் திருமணத்தை நிறுத்தி தொல்லை கொடுத்த உண்மையான வில்லனே நாயகன் தான். ‘மின்னலே’ படமும் கூட கிட்டத்தட்ட இதற்கு நெருக்கமான கதைதான்.