இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு.. மாலத்தீவு அதிபருக்கு உள்நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு..
பிரதமர் மோடி இந்த மாதத் தொடக்கத்தில் லட்சத்தீவுக்கு அரச முறை பயனம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர் லட்சத்தீவின் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை மற்றும் அங்கு சாகச பொழுதுபோக்கு செய்த புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் லட்சத்தீவு முதலிடம் பிடித்தது.
இதனிடையே பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த இழிவான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மாலத்தீவை தவிர்க்க வேண்டும் என்று பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் #BoycottMaldives என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாது. இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்ய தொடங்கினர்.
இந்த விவகாரத்தால் இந்தியா – மாலத்தீவு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட மாலத்தீவு அதிபர் தங்கள் நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் இந்தியா எதிரான மாலத்தீவு அதிபரின் நிலைப்பாட்டுக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி.) மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகள் அதிபர் முகமது முய்சுவின் ‘இந்தியா-விரோத’ நிலைப்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், மாலத்தீவின் வெளியுறவுக் கொள்கையின் மாற்றம் நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு ‘மிகவும் கேடு விளைவிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.. மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் நட்பு நாடுகளிடம் இருந்து விலகி இருப்பது மாலத்தீவின் நீடித்த வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாலத்தீவு மக்களின் நலனுக்காக அனைத்து வளர்ச்சிப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படும்” திறனைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிககி எடுக்க வேண்டும். இந்தியாவுடனான வரலாற்று ஒத்துழைப்பிலிருந்து விலகுவது, மாலத்தீவின் ஸ்திரத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்று” தெரிவித்துள்ளனர்.
அதிபர் முய்ஸுவின் தலைமையின் கீழ் மாறிவரும் புவிசார் அரசியல் இயக்கவியலின் தாக்கங்கள் குறித்து மாலைதீவு அரசியலுக்குள் அதிகரித்துவரும் அச்சத்தை கூட்டு எதிர்க்கட்சியின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவின் அதிபராக பதவியேற்ற முகமது முய்சு இந்தியா அவுட் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்ததுடன், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிற்கு பெயர் போன அவர், தங்கள் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள 88 ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் என்றும் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.