பசியால் வாடும் சிறார்கள்… கால்நடை தீவனங்களை உணவாக்கும் அவலம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் பசியால் வாடும் குடும்பங்கள் பல, கால்நடை தீவனங்களை உணவாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வேறு வழியில்லை
குறித்த முகாமில், குடும்பம் ஒன்று, தங்களின் இரு குதிரைகளை கொன்று சமைத்து சாப்பிட்டதாகவும் கூறுகின்றனர். பாசியால் சாகும் நிலை என்று குறிப்பிட்டுள்ள ஒருவர் குழந்தைகளுக்கு உணவளிக்க குதிரைகளை அறுப்பதைத் தவிர வேறு வழியில்லை என பரிதாபமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு முன்னர் பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்த மிகப்பெரிய முகாமாக ஜபாலியா அறியப்படுகிறது. 1948ல் இருந்தே செயல்பட்டுவரும் இந்த முகாமில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும், மின் தடையும் இருப்பதாக கூறுகின்றனர்.
100,000-க்கும் அதிகமான மக்கள் தங்கும் அந்த முகாமில் வேலையின்மை மற்றும் வறுமை முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இஸ்ரேல் படைகளின் குண்டுவீச்சு காரணமாக உதவி நிறுவனங்களால் அந்த பகுதிக்குள் செல்ல முடியாமல் இப்போது உணவும் தீர்ந்து வருகிறது.
கால்நடை தீவனங்கள்
முகாமில், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் நசுங்கிய சமையல் பாத்திரங்களை கையில் ஏந்தியபடி குழந்தைகள் உணவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பெண் ஒருவர் தெரிவிக்கையில், உணவு இல்லை, கோதுமை இல்லை, குடிநீர் இல்லை, கால்நடை தீவனங்களை உணவாக்குவதை தவிர வேறு வழியில்லை என்று கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.