அதிமுகவிடம் 6 தொகுதிகளில் பட்டியலை கொடுத்து 2 இடங்களை கேட்கும் எஸ்டிபிஐ… எந்த எந்த தொகுதி தெரியுமா.?
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சார பணிகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சியோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளது. இதே போல அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துள்ளது. ஆனால் தற்போது வரை அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. பாமக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைய ரகசியமாக நடத்தி வருகிறது.
6 தொகுதிகளின் பட்டியலை கொடுத்த எஸ்டிபிஐ
இந்தநிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ தாங்கள் போட்டியிட விரும்பும் 6 தொகுதிகளின் பட்டியலை அதிமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் ஈரோடு, பொள்ளாச்சி, மத்திய சென்னை, ராமநாதபுரம், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளது. இதில் ஏதேனும் இரண்டு தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்டிபிஐ கட்சி கொடுத்த பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு தொகுதியை மட்டும் அதிமுக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.