வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
இந்திய பெருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பெருங்கடல் பகுதியில், இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, பயங்கரவாதிகள், ‘ட்ரோன்’ வாயிலாக தாக்குதல் நடத்தினர். இதில், அந்தக் கப்பலில் இருந்த, 21 இந்தியர்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதேபோல், மத்திய ஆப்ரிக்க நாடான, காபோனுக்கு சொந்தமான, இந்திய தேசியக் கொடியுடன் கூடிய, ‘எம்.வி.சாய் பாபா’ என பெயரிடப்பட்ட கச்சா எண்ணெய் வணிக கப்பல் மீதும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், கப்பலில் பயணித்த 25 இந்திய பணியாளர்கள் உயிர் தப்பினர்.இந்நிலையில்,வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ளவர்களை கண்டுப்பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குற்றவாளிகள் ஆழ்கடலில் மறைந்து இருந்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.மேற்கு அரபிக்கடல் எல்லைப் பகுதியில் வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது.