பொலிஸ் வாகனம் மோதி மரணமடைந்த மாணவி ஜாஹ்னவி: குற்றவியல் நடவடிக்கை கோரி திரண்ட மக்கள்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பொலிஸ் வாகனம் மோதி இந்திய மாணவி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

குற்றவியல் நடவடிக்கை
குறித்த சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியின் செயலை போக்குவரத்து விதி மீறல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சம் 5,000 டொலர் அபராதம் செலுத்த நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் உள்ளூர் மக்களும் சில சமூக ஆர்வலர்கள் குழுக்களும் தொடர்புடைய அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Kevin Dave என்ற அந்த அதிகாரி இந்த வழக்கில் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்றே சட்டத்தரணிகள் தரப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போதை மருந்து அதிகமாக உட்கொண்ட நபரை மீட்கும் பொருட்டு, Kevin Dave தமது வாகனத்தை மணிக்கு 74 மைல்கள் வேகத்தில் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சாலையை கடக்க காத்திருந்த 23 வயது இந்திய மாணவி ஜாஹ்னவி கத்துலா மீது அந்த வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

மகளின் வருகைக்காக காத்திருக்கிறார்
தொடர்புடைய விபத்தில் Kevin Dave கண்மூடித்தனமாகவோ கவனக்குறைவாகவோ வாகனம் ஓட்டியதாக ஆதாரமேதும் பதிவாகவில்லை. இதனையடுத்து, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்காமல் போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிந்துள்ளனர்.

இதனால் 35 வயதான அந்த பொலிஸ் அதிகாரி 5,000 டொலர்கள் வரையில் அபராதம் செலுத்த நேரிடும். இதனையடுத்தே, ஜாஹ்னவி கந்துலாவின் மரணம் வெறும் போக்குவரத்து விதி மீறல் என்று சுருக்குவது முறையல்ல என குறிப்பிட்டு உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

அந்த அதிகாரி மீது கொலை வழக்கு பதியப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு வாஷிங்டன் மாகாணத்தில் 234,408 பேர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜாஹ்னவி ஒரு பொருளல்ல, அவருக்கு இந்தியாவில் ஒரு குடும்பம் இருக்கிறது. ஒரு தாயார் தமது மகளின் வருகைக்காக காத்திருக்கிறார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *