மாணவர்களே பயன்படுத்திக்கோங்க..! இன்று மாநிலம் முழுவதும் சிறப்பு கல்விக்கடன் முகாம்..!
தமிழகத்தில் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் இன்று (பிப்.15) சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பணம் இல்லாமல் உயர்கல்வியை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தனிமனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வியின் பங்கு மிக முக்கியமானது என்பதாலும், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உச்ச வரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடன் வரம்பு: ரூ.1 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கலாம். ரூ.1,00,001 முதல் ரூ.5,00,000 வரை அளிக்கப்படும் கடனுக்கு 100% பிணையம் பெறப்பட வேண்டும். படிப்பிற்குண்டான டியூஷன் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் மற்றும் உணவு கட்டணம், ஆய்வக கட்டணம், புத்தக கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை சேர்த்து கடன் வழங்கப்படும்.
கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தப்படாதபட்சத்தில், கடனை வசூலிக்க இதர கடன்களுக்கு பின்பற்றப்படும் சட்டபூர்வ வழிமுறைகள் இக்கடனுக்கும் பொருந்தும். மாணவர்கள் கடன் பெற தகுதி: இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். கல்விக் கடன் பெறும் மாணவன் அல்லது மாணவி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் எடுத்து வர வேண்டிய ஆவணங்களின் விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதாவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு, சாதி சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்று, கல்லூரி கட்டண விவரம், முதல் பட்டதாரி சான்று, வங்கி பாஸ் புக், கல்லூரி சேர்க்கை கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.