மீண்டும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சுப்ரமணியன் சுவாமி..!
பாஜகவில் இருந்தபோதும் அவ்வப்போது பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர் சுப்ரமணியன் சுவாமி. சமீபத்தில் கூட அயோத்தி ராமருக்கான விழாவில் மோடியின் பங்களிப்பு பூஜ்ஜியம் என அண்மையில் சுப்ரமணியன் சுவாமி கருத்து பகிர்ந்திருந்தார்.
அது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை தான் கட்டியதாக பிரதமர் கூறிக்கொள்கிறார். அயோத்தி ராமர் கோயிலில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியம் தான். அதற்கு பதிலாக மோடி தனது வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு ஞானவாபி ஜோதிர்லிங்க காசி கோயில் மீண்டும் கட்டப்பட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் குடமுழுக்கு விழா நாளில் மற்றுமொரு தாக்குதல் பதிவை, பிரதமர் மோடிக்கு எதிராக தொடுத்துள்ளார். ”மோடி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பகவான் ராமரைப் பின்பற்றவில்லை. குறிப்பாக தனது மனைவியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மேலும் ராம ராஜ்ஜியத்தின்படியும் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின்போது அவர் நடந்துகொள்ளவில்லை” என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.