நீண்ட போராட்டத்துக்குப் பிறகே வெற்றி கிடைத்தது – மஞ்ஞுமல் பாய்ஸ் நடிகர் நெகிழ்ச்சி!
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மலையாளப் படம் மஞ்சுமெல் பாய்ஸ் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் 25 கோடிகளைத் தாண்டியுள்ள படம் உலக அளவில் 100 கோடிகளை தாண்டி வசூல் வேட்டையை தொடர்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை பலரும் அதிர்ஷ்டத்துடன் ஒப்பிடுகின்றனர். அது குறித்து படத்தில் சுதீஷ் என்ற நண்பராக நடித்த, நடிகர் தீபக் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ஒரு வெற்றியில் அதிர்ஷ்டம் முக்கிய பங்காக இருக்கலாம். ஆனால், உண்மையான அதிர்ஷ்டம் என்பது அசைக்க முடியாத ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மூலம் மட்டுமே அடையக் கூடியதாக இருக்கிறது. மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஒரே இரவில் சென்சேஷனலாக மாறிவிட்டது என சிலருக்குத் தோன்றலாம்.
ஆனால், இந்தப் படக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்காக நீண்ட காலம் சினிமாத் துறையில் போராடியுள்ளனர்” என்றார். தீபக் வினீத் சீனிவாசன் இயக்குநராக அறிமுகமான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தில் நடிகராக அறிமுகமானார். வினீத் சீனிவாசனின் இரண்டாவது படமான, தட்டத்தின் மறையத்து படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு தீரா, ரேக்ஷதிகாரி பைஜு, கேப்டன் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, மம்முட்டியின் கண்ணூர் ஸ்கொயட் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில், சுதீஷ் என்ற நண்பன் கதாபாத்திரத்துக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் சிதம்பரம் இவரைத் தேர்வு செய்துள்ளார். தமிழ்நாட்டில் படம் வரவேற்பு பெற்றதும், கமலை சந்தித்து உரையாடியதும் தீபக்கிற்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியுள்ளது.
தன்னுடைய நடிப்பிற்காக தமிழ்நாட்டு மக்களின் அன்பையும், பாராட்டுக்களையும் பெற்றதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர் அதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.